இலங்கை அணிக்கு இனி அட்டப்பட்டு பயிற்சி தருவார்!
கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் கேப்டனும், முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான மர்வான் அட்டப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அட்டப்பட்டு நியமனத்தை கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு ஒருமனதாக ஒத்துக் கொண்டுள்ளது.

புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு தேர்வுக் குழுவின் பரிந்துரையும் அட்டப்பட்டு பெயரை மட்டுமே பரிந்துரைத்திருந்தது. இதையடுத்து இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக அட்டப்பட்டுவை நியமிக்கிறோம். அவருக்கு வாழ்த்துகள். நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
43 வயதான அட்டப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் தலைமைப் பயிற்சியாளராக இருந்த பால் பார்பிரேஸ் ராஜினாமா செய்த பின்னர் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரை நிரந்தரமாக்கியுள்ளனர்.
இடைக்கால பயிற்சியாளராக, இங்கிலாந்தில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றபோது அட்டப்பட்டு பயிற்சியாளராக வழி நடத்தியுள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் நடந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரையும் அட்டப்பட்டு பயிற்சியின் கீழ் இலங்கை வென்றுள்ளது.
1990 முதல் 2007 வரை 90 டெஸ்ட் போட்டிகள், 268 ஒரு நாள் போட்டிகளில் அட்டப்பட்டு ஆடியுள்ளார். 2011ம் ஆண்டு அவர் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2013ல் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணிக்கு கடந்த பல வருடங்களாகவே வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள்தான் நியமிக்கப்பட்டு வந்தனர்.
உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் பயிற்சியாளராக இருந்தது கடைசியாக 1999ம் ஆண்டுதான். அதன் பின்னர் தற்போதுதான் உள்ளூர் பயிற்சியாளருக்கு மாறியுள்ளது இலங்கை.


Click it and Unblock the Notifications