ஜெய்ப்பூர்: சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்ததாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் (RCA) இடைக்கால நிர்வாக குழு உறுப்பினர் ஜெய்தீப் பிஹானி குற்றம் சுமத்தி இருக்கிறார். இது ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில், இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்திருந்தது. இந்தப் போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களும், 14 வயதான வைபவ் சூர்யவம்சி 34 ரன்களும் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர்.

8.4 ஓவர்களில் எல்லாம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 85 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 25 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது எட்டு விக்கெட்கள் கையில் இருந்தன. அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படியும் வெற்றி பெறும் என அனைவரும் நினைத்தனர்.
ஆனால், 18-வது ஓவரை வீசிய லக்னோ வேகப் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் அந்த ஓவரில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
அடுத்து கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் மீண்டும் அபாரமாக பந்து வீசி ஆறு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார் ஆவேஷ் கான். அதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது குறித்துப் பேசியிருக்கும் ஜெய்தீப் பிஹானி, "ஒரு அணி எப்படி கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் தோல்வி அடையும்? ஒரு சின்ன குழந்தை கூட இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்திருப்பதைப் புரிந்து கொள்ளும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்." என்று கூறியிருக்கிறார்.
இதற்கு முந்தைய போட்டியிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஜெய்தீப் பிஹானியின் விமர்சனத்திற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லாத நிலையில், ஒரு கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்தவரே தனது மாநில ஐபிஎல் அணி மீது மேட்ச் பிக்ஸிங் புகார் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.