லண்டன்: ஸ்பாட் பிக்ஸிங் புகாருக்குள்ளாகியுள்ள 3 பாகிஸ்தான் வீரர்களையும் நீக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் அணி கோரியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு சிக்கியுள்ளனர். குறிப்பாக கேப்டன் சல்மான் பட், முஹம்மது ஆசிப், முஹம்மது ஆமிர் ஆகியோருக்கு இதில் தொடர்புள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பிக்ஸிங் செய்ய இவர்களுக்கு பணம் கொடுத்தவரான லண்டனைச் சேர்ந்த மசார் மஜீத் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது போலீசார் மஜீத், அவர் மனைவி, அவரது மூத்த சகோதரர் அசார் மஜித் ஆகியோரை மீண்டும் கைது செய்துள்ளனர்.
முஹம்மது ஆமிரும், முஹம்மது ஆசிபும் தான் மஜீதின் பேச்சைக் கேட்டு நோ-பால் போட்டவர்கள். வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் அரங்கில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை நடந்த ஆட்டத்தில் இவர்கள் 3 நோ-பால் போட்டுள்ளனர்.
இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த 3 வீரர்களையும் டுவென்டி20 மற்றும் ஒரு நாள் ஆட்டத்திலிருந்து நீக்குமாறு இங்கிலாந்து வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் ஆங்கஸ் போர்டர் கூறியதாவது,
கார்டிப்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் சர்வதேச டுவென்டி20 ஆட்டத்திற்கு முன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தக்க நடவடிக்கை எடிக்க வேண்டுமென்று இங்கிலாந்து வீரர்கள் விரும்புகின்றனர்.
ஆட்டத்தை தொடர்வது எவ்வளவு முக்கியம் என்று இங்கிலாந்து வீரர்கள் அறிவார்கள். அதே சமயம் குற்றத்தில் தொடர்புடையவர்களுடன் விளையாடுவதை சிரமமாகக் கருதுகின்றனர்.
குற்றம் செய்தவர்களை அணியில் இருந்து சஸ்பென்ட் செய்ய வேண்டும். அல்லது அவர்கள் விளையாட முடியாதவாறு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
இங்கிலாந்து வீரர்கள் என்னிடம் சொல்லவில்லை என்றாலும் அவர்கள் அனைவரும் இந்த விஷயத்தில் ஏற்பட்டுள்ள தாமத்தால் வெறுப்படைந்துள்ளனர் என்று நினைக்கிறேன். இந்த சிக்கலான விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை பார்க்கவே விரும்புகிறோம். இதை சாதாரணமாக விட்டுவிடக்கூடாது என்று அவர் கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்வாலெக் அரங்கில் நடக்கவுள்ள ஆட்டத்திற்கு இங்கிலாந்து வீரர்கள் மைதானத்திற்குள் வரமாட்டார்கள் என்று போர்டர் கூறவில்லை. ஆனால், அந்த ஆட்டத்தின் தன்மை சந்தேகத்தில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.
நாளை டௌன்டனில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆசிப், ஆமிர், பட் ஆகிய 3 பேரும் விளையாட மாட்டார்கள். ஏனெனில் அவர்களிடம் இன்று ஸ்காட்லாந்து யார்டு துப்பறிவாளர்களும், பின்னர் ஐசிசியும் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த விவகாரத்தில் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் பெயரும் அடிபட்டது. ஆனால் அவருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை என்று ஸ்காட்லாந்து யார்டு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் நாளை நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளார்.