அகமதாபாத்: ஐபிஎல் இறுதிப்போட்டி 15 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டதால், சென்னை அணிக்கு கிடைத்த லாபம் என்ன என்பதை பார்க்கலாம்.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதால், சேஸிங்கை தேர்வு செய்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் பேட்டிங் செய்ய தொடங்கிய போதே கனமழை குறுக்கிட்டது. சுமார் 30 நிமிடங்கள் பெய்த கனமழையால், ஆடுகளம் அதிகளவில் ஈரப்பதம் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய நீண்ட நேரம் தேவைப்பட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் அதிகபட்சமாக 3 ஓவர்கள் மட்டுமே வீசலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இலக்கு சாத்தியமா என்று சிஎஸ்கே ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ஆனால் மழை குறுக்கிட்டதால் பேட்டிங் செய்யும் அணிக்கே அதிக சாதகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டாஸின் போது ஆடுகளம், பிளாட் பிட்ச் என்று ஹர்திக் கூறி இருந்தார். இதனால் முதல் 4 ஓவர்களை விக்கெட் கொடுக்காமல் கடந்துவிட்டாலே, எவ்வளவு பெரிய இலக்கையும் அடிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ரஷித் கான் மற்றும் முகமது ஷமி ஆகியோர் 3 ஓவர்கள் மட்டுமே வீசவுள்ளதும் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதனால் சென்னை அணி 5வது ஐபிஎல் கோப்பையுடன் கொண்டாட அதிக வாய்ப்புகள் உள்ளது.