பெங்களூரு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு முன்பு நடைபெறும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதற்காக ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்திய அணி வீரர்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா தனது உடல் தகுதியை நிரூபித்து தற்போது அயர்லாந்து தொடரில் விளையாட போகிறார்.

ஆனால் இந்திய அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இன்னும் தங்களது முழு உடல் தகுதியை நிரூபிக்கவில்லை. இதனால் இவர்களுடைய எதிர்காலத்தை தீர்மானிக்க பிசிசிஐ ஒரு முடிவை எடுத்து இருக்கிறது. அதன்படி மேட்ச் ஸ்டிமுலேசன் என்ற முறையை அவர்கள் பின்பற்றப் போகிறார்கள். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஏற்கனவே தங்களது பயிற்சியை தொடங்கி விட்டார்கள்.
இந்த நிலையில் இருவரின் உடல் தகுதியையும் சோதிக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது. போட்டி சூழலில் என்னென்ன இருக்குமோ அதை செயற்கையாக உருவாக்கி அதில் வீரர்களை விளையாட வைக்கும் முறைக்கு பெயர் தான் ஸ்டிமுலேசன். ஆசிய கோப்பை தொடரில் எப்படி ஆடுகளம் இருக்குமோ அதேபோல் ஆடுகளத்தை தயாரித்து இருபது ஓவரில் ராகுலும் ஸ்ரேயாஸ் இணைந்து 130 ரன்களை ஆட்டமிழக்காமல் அடிக்க வேண்டும் என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படும்.
இதில் இருவரும் ஆட்டம் இழக்காமல் விளையாட வேண்டும் பிறகு கே எல் ராகுல் 50 ஓவர் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் 50 ஓவர் வரை பில்டிங் செய்ய வேண்டும். இதில் இரண்டு வீரர்களும் உடலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் விளையாடி முடித்தால் அவர்கள் 100% உடல் தகுதியை எட்டி விட்டார்கள் என்று மருத்துவர் நிபுணர்கள் சான்றுகள் அளிப்பார்கள்.
அதன் பிறகு தேர்வு குழுவினர் இருவரையும் இந்திய அணியில் சேர்ப்பார்கள். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக எந்தப் போட்டியுமே விளையாடவில்லை. இதனால் முதல் போட்டியே பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். இதனால் அதையும் ஆலோசனை செய்து தான் தேர்வு குழுவினர் இறுதி முடிவு எடுப்பார்கள்.