உயிரைப் பறிக்க சதி? குடிநீர் பாட்டிலில் அந்த பொருள்.. காவல்துறையில் புகார் அளித்த மயங்க் அகர்வால்
அகர்தலா : இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால் தனக்கு விமானத்தில் குடிநீருக்கு பதில் உயிரைப் பறிக்கும் வாய்ப்பு கொண்ட வேதிப் பொருள் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையில் சந்தேகத்தின் அடிப்படையில் புகார் அளித்து இருக்கிறார் .
இந்திய கிரிக்கெட் அணியில் 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால். இவர் விராட் கோலியின் நண்பரும் ஆவார். இந்தியா அண்டர் 19 கிரிக்கெட் அணியில் இருந்து மயங்க் அகர்வால் சிறந்த கிரிக்கெட் வீரராக பல இடங்களில் தன்னை நிரூபித்து இருக்கிறார். எனினும், அவருக்கு இந்திய அணியில் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவர் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் கர்நாடகா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரஞ்சி தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் ஆடி விட்டு சக வீரர்களுடன் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்க சூரத் செல்ல விமானம் ஏறி இருந்தார். விமானத்தில் அனைவருக்கும் முன்பு இருக்கும் பையில் குடிநீர் வைக்கப்பட்டு இருக்கும். அதே போல தன் இருக்கைக்கு முன் இருந்த பையில் வைக்கப்பட்டு இருந்த குடிநீர் பாட்டிலை எடுத்து அருந்தி இருக்கிறார் மயங்க் அகர்வால்.
அது குடிநீர் இல்லை என்பதை அறிந்து கீழே துப்பி இருக்கிறார். அவரது தொண்டை எரிந்துள்ளது. அதன் பின் வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். அவரை உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் அபாய கட்டத்தில் இல்லை என்பதை அறிந்து அனைவரும் நிம்மதி அடைந்தனர். அதே சமயம், அவர் அருந்திய குடிநீர் பாட்டிலில் இருந்தது என்ன? அது எப்படி சரியாக மயங்க் அகர்வால் இருக்கைக்கு முன் வைக்கப்பட்டது? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.
இதை அடுத்து தன் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்திருக்கலாம் என்பதால் மயங்க் அகர்வால் திரிபுரா மாநிலம் அகர்தலா நகர காவல்துறையிடம் புகார் அளித்து இருக்கிறார். இதற்கிடையே அவர் அனுமதிக்கப்பட்ட ஐஎல்எஸ் மருத்துவமனை அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. மேலும், திரிபுரா மாநில சுகாதாரத்துறை உயர் அதிகாரி அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர் தவறுதலாக தண்ணீர் என நினைத்து குடுவையில் இருந்த நீரை குடித்து விட்டதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications