IND vs BAN: அறிமுகப் போட்டியிலேயே சாதனை படைத்த மயங்க் யாதவ்.. முதல் ஓவரில் மெகா ரெக்கார்டு
குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அறிமுகம் ஆன மயங்க் யாதவ் மிகப்பெரும் வரலாற்று சாதனை ஒன்றை செய்தார். சர்வதேச அறிமுக டி20 போட்டியில் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசிய மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.
இதற்கு முன் 2006ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகம் ஆன வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் தான் வீசிய முதல் ஓவரை மெய்டன் ஓவராக வீசி இருந்தார். அதன் பின் 2022 ஆம் ஆண்டு அர்ஷ்தீப் சிங் தனது அறிமுகப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி இருந்தார்.

அதன் பின்பு தற்போது 2024 ஆம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகம் ஆன வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் வங்கதேச அணிக்கு எதிராக தான் வீசிய முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
அவர் 150 கிலோ மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்து வீசுவார் என்பதன் அடிப்படையிலேயே இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அவர் ஒரு முறை கூட 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசவில்லை. ஆனால், அவரது வேகம் சராசரியாக 145 கிலோ மீட்டர் ஆக இருந்தது. அதிகபட்சமாக 149.9 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்தார்.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வருண் சக்கரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர். அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி வெறும் 11.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது. ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 16 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 29 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் சேர்த்தனர்.


Click it and Unblock the Notifications