மும்பை: 2011ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத வகையில் தோனி அடித்த சிக்சர் பந்து விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்றி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கவுரவித்துள்ளது.
1983ஆம் ஆண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 276 ரன்கள் இலக்கை இந்திய அணி விரட்டியது. கவுதம் கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழந்த பின், அப்போதைய இந்திய அணி கேப்டன் தோனி - யுவராஜ் சிங் இருவரும் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிபெற வைத்தனர்.

இந்த ஆட்டத்தின் முக்கிய தருணமாக இலங்கை அணியின் முன்னணி பந்துவீச்சாளர் குலசேகரா வீசிய 48வது ஓவரின் 2வது பந்தில் தோனி சிக்சரை விளாசி இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பையை வென்று அசத்தியது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக்கோப்பையில், இந்திய அணி வென்று அசத்தியது.
இதன் மூலம் கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆசை நிறைவேறியது. இப்போது 2011 உலகக்கோப்பை பற்றி சிந்தித்தால் அனைவருக்கும் தோனி அடித்த கடைசி சிக்சர் தான் நினைவுக்கு வரும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் மகத்தான தருணங்களில் தோனி அடித்த சிக்சருக்கு மிகமுக்கிய பங்குண்டு. 1983 உலகக்கோப்பையில் கபில் தேவ் பிடித்த கேட்ச் எப்படியொரு மகத்தான தருணமோ, அதேபோல் தோனி அடித்த சிக்சரும் சிறந்த தருணமாகும்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் கவுரவித்துள்ளது . அதன்படி.இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் 'வின்னிங் ஷாட்' சிக்சரை கவுரவிக்கும் விதத்தில், அந்த சிக்சர் பந்து விழுந்த இடத்தை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. வான்கடே மைதானத்தில் இருக்கை எண் ஜே 282 - ஜே 286 ஆகியவற்றை நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது, கிரிக்கெட் வரலாற்றில், ஒருவரின் சிக்சரை நினைவுகோரும் விதத்தில் நினைவிடம் அமைப்பது இதுவே முதல் முறையாகும்.

தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் விளையாடி வரும் தோனிக்கு, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கர் கொடுத்துள்ள கவுரவம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாட உள்ள நிலையில், வான்கடே மைதானத்தில் தோனிக்கு செய்யப்பட்டுள்ள கவுரவம் ரசிகர்களிடையே கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சிக்சர் பந்து விழுந்த இருக்கைகளை தோனி நேரில் சென்று பார்வையிட்டார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே தோனி அடித்த உலகக்கோப்பை சிக்சர் குறித்து பலரும் புகழ்ந்து நிலையில், உலகக்கோப்பை வென்று தந்தது ஒட்டுமொத்த இந்திய அணியும்தான் என்பதை மறக்க வேண்டாம். சிக்சர் மீதான மோகத்தை ரசிகர்கள் கைவிட வேண்டும் என்று கம்பீர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பாக தோனி அடித்த சிக்சர் பந்து விழுந்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை கம்பீர் எப்படி எடுத்துக் கொள்வார் என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.