வெல்லிங்டன்: நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், புதிய வரலாறு படைத்து விட்டார்
வெல்லிங்டன்: நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம், புதிய வரலாறு படைத்து விட்டார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற வரலாறுதான் அது.
முச்சதம் அடித்ததோடு, இந்தியாவின் வெற்றியையும் சிதைத்து அவர் மேலும் ஒரு சாதனையையும் செய்து விட்டார். முற்றிலும் இந்தியாவின் பக்கம் திரும்பியிருந்த வெற்றி வாய்ப்பை அப்படியே காலி செய்து நியூசிலாந்தை தப்ப வைத்தும் அவர் அசத்தி விட்டார்.

அழகான ஆட்டம்
மெக்கல்லம் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியபோது நியூசிலாந்து அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது.

கட்டையைப் போட்டே காலி செய்த மெக்கல்லம்
இதையடுத்து மகா நிதானமாக ஆட ஆரம்பித்தார் மெக்கல்லம். வழக்கமாக அவர் அதிரடியாக ஆடக் கூடியவர். ஆனால் 2வது இன்னிங்ஸில் அவர் காட்டிய நிதானம் இந்திய பந்து வீச்சாளர்களை டென்ஷனாக்கி விட்டது.

முதலில் இன்னிங்ஸ் தோல்வி தவிர்ப்பு
தனது நிதானமான ஆட்டத்தால் நியூசிலாந்து அணியை முதலில் இன்னிங்ஸ் தோல்வி வாய்ப்பிலிருந்து விடுவித்தார் மெக்கல்லம்.

முன்னிலை பெற உதவினார்
அடுத்து இந்தியாவை விட முன்னிலை பெறும் அளவுக்கு அணியை இட்டுச் சென்றது மெக்கல்லத்தின் பேட்டிங்.

கடைசியில் டிராவுக்கு வித்திட்டார்
அதன் பின்னர் பேட்டிங்கில் சற்று அதிரடி காட்டிய அவர் தனது முதல் முச்சதத்தை எட்டினார். அத்தோடு போட்டியை டிராவுக்கும் இட்டுச் செல்ல உதவினார்.

உலக சாதனை
இந்தப் போட்டியில் அவரும் வால்டிங்கும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 352 ரன்களைக் குவித்தனர். இது ஒரு உலக சாதனையாகும்.

நீஷத்துடன் இணைந்தும் ஒரு சாதனை
அதேபோல வால்டிங் அவுட்டாகிப் போன பின்னர் புதுமுக வீரர் நீஷத்துடன் இணைந்து 179 ரன்களைச் சேர்த்தார் மெக்கல்லம். இதுதான் இந்தியாவிடமிருந்து வெற்றி வாய்ப்பை முற்றிலுமாக பறிக்க உதவியது.

மார்ட்டின் குரோவை மிஞ்சினார்
இதற்கு முன்பு மார்ட்டின் குரோதான் நியூசிலாந்துக்காக ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 299 ரன்களைக் குவித்திருந்தார். அதை தற்போது மெக்கல்லம் முறியடித்து விட்டார். குரோவும் 1991ம் ஆண்டு இதே வெல்லிங்டனில்தான் அந்த ரன்களை எடுத்திருந்தார்.

5வது பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்னும் இதுவே
5வதாக களம் இறங்கிய ஒரு பேட்ஸ்மேன் அதிக அளவில் ரன் குவித்த சாதனை இதுவரை ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் வசம் இருந்தது. அவர் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதையும் தற்போது மெக்கல்லம் முறியடித்துள்ளார்.

இது மெக்கல்லத்தின் டெஸ்ட்
மொத்தத்தில் இது 2வது டெஸ்ட் என்று கூறுவதை விட மெக்கல்லம் டெஸ்ட் என்றே சொல்லி விடலாம். அந்த அளவுக்கு இந்தப் போட்டியை ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டார் மெக்கல்லம்.


Click it and Unblock the Notifications