மெல்போர்ன்: உலக கோப்பை இறுதி போட்டியில், இந்திய ரசிகர்கள் தங்களது பேராதரவை நியூசிலாந்துக்கு தர வேண்டும் என்று திறந்த மடல் எழுதியுள்ளார் நியூசிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்.
உலக கோப்பை இறுதி போட்டியில், நாளை, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள், மெல்போர்ன் மைதானத்தில் மோத உள்ளன. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்தும், இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் நியூசிலாந்தின் கேப்டனும், அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம், இந்திய ரசிகர்களுக்கு, பூமா நிறுவனம் வாயிலாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: உலக கோப்பை இறுதி போட்டியில், இந்திய ரசிகர்களின் ஆதரவு நியூசிலாந்துக்குதான் கிடைக்கப்போகிறது என்பது தெரிய ஆரம்பித்துள்ளது.
ஆனால், இந்திய ரசிகர்களிடம் நியூசிலாந்து வீரர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். உங்களது ஆதரவை ஒவ்வொரு பந்திற்கும் காண்பியுங்கள். உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தாகம், எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தவர்கள் இந்திய ரசிகர்கள். எங்கள் கிரிக்கெட் அணிக்கு, இது மிகப்பெரிய தருணமாகும். இந்த நேரத்தில், உங்களது ஆதரவை நாங்கள் கேட்டு நிற்கிறோம். உங்களது கோஷம் எங்களுக்கு தேவை. இவ்வாறு மெக்கல்லம் கேட்டுக் கொண்டுள்ளார்.