Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவுக்கு ரூ.60 கோடி நஷ்டம்.. மன்னிப்பு கேட்ட கியூரேட்டர்.. மெல்போர்ன் பிட்ச் விவகாரம்

மெல்போர்ன்: ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டே நாட்களில் முடிவடைந்து கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோசமான ஆடுகளத்தால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பிற்கு சுமார் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தின் (MCG) ஆடுகள சீரமைப்பாளர் மேட் பேஜ் (Matt Page) மௌனம் கலைத்துள்ளார்.

பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி 4 அல்லது 5 நாட்கள் வரை சென்றால் தான் கிரிக்கெட் வாரியத்திற்கு டிக்கெட் விற்பனை, உணவு மற்றும் ஒளிபரப்பு உரிமம் மூலம் முழுமையான வருமானம் கிடைக்கும். ஆனால், மெல்போர்னில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவடைந்ததால், கடைசி 3 நாட்களுக்கான வருமானம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

MCG Ashes Test Ends in 2 Days Cricket Australia Faces Rs 60 Crore Loss Over Poor Pitch

இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு சுமார் 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெர்த் டெஸ்ட் போட்டியும் 2 நாட்களில் முடிவடைந்த நிலையில், தற்போது மெல்போர்னிலும் அதே கதை தொடர்ந்திருப்பது நிர்வாகத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.

மைதானத்தில் நடந்தது என்ன?

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே 20 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்களால் காலூன்றவே முடியவில்லை. இரண்டாவது நாளில், 175 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இருப்பினும், ஆஸ்திரேலியா ஏற்கனவே முதல் 3 போட்டிகளை வென்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்:

இந்த மோசமான பிட்ச் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், பிட்ச் சீரமைப்பாளர் மேட் பேஜ் முதன்முறையாக வாய் திறந்துள்ளார். அவர் கூறுகையில், "முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் விழுவதைப் பார்த்து நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன்.

எனது இத்தனை ஆண்டு அனுபவத்தில் இப்படியொரு டெஸ்ட் போட்டியை நான் பார்த்ததே இல்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையே சமநிலை நிலவி, போட்டி 4 அல்லது 5 நாட்கள் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆனால், நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. இந்தத் தவறை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இனி வரும் காலங்களில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஆதரவு கொடுத்த டிராவிஸ் ஹெட்:

பிட்ச் சீரமைப்பாளர் மீது கடுமையான விமர்சனங்கள் எழும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். "பிட்ச் சீரமைப்பாளர் வேலை மிகவும் கடினமானது. ஆடுகளத்தில் 1 அல்லது 2 மிமீ புல்லை அதிகமாக விட்டால் பந்துவீச்சுக்கு சாதகமாகவும், குறைத்தால் பேட்டிங்கிற்கு சாதகமாகவும் மாறிவிடும். இந்த நுணுக்கமான வேலையில் சில நேரங்களில் இதுபோன்று நடப்பது இயல்புதான். அவரின் நிலைமையை நான் புரிந்துகொள்கிறேன்" என்று ஹெட் கூறியுள்ளார்.

2 நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்ததால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா வாரியத்திற்கு ஏற்பட்ட 60 கோடி ரூபாய் நஷ்டம் யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, December 28, 2025, 13:10 [IST]
Other articles published on Dec 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+