மும்பை: மேகாலயாவைச் சேர்ந்த 25 வயதான ஆகாஷ் குமார் சௌத்ரி, ரஞ்சி டிராபி போட்டியில் தொடர்ச்சியாக 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை விளாசி, ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த சர் கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோரின் வரலாற்றுச் சாதனையைச் சமன் செய்து, அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார். இதன்பின் தான் செய்த சாதனை என்னவென்றே தெரியாமல் இருந்துள்ளார் ஆகாஷ் குமார்.
ஒரு இரும்பு பட்டறை தொழிலாளியின் மகனாக, டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்கிய ஆகாஷின் இந்த பிரம்மிக்க வைக்கும் வளர்ச்சி, பல இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.

சூரத் மைதானத்தில், ரஞ்சி டிராபி பிளேட் குரூப் பிரிவில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக மேகாலயா அணி விளையாடியது. மேகாலயா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 576 ரன்கள் எடுத்திருந்தபோது, 8-வது வீரராக ஆகாஷ் களமிறங்கினார். அணி நிர்வாகத்தின் திட்டம் தெளிவாக இருந்தது - டிக்ளேர் செய்வதற்கு முன்பு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை அதிரடியாகக் குவிக்க வேண்டும்.
இந்த அறிவுறுத்தலுடன் களமிறங்கிய ஆகாஷ், பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தார். போட்டியின் 126-வது ஓவரில், பந்துவீச்சாளர் லிமர் டாபியின் ஓவரில் தொடர்ச்சியாக 6 பந்துகளையும் சிக்ஸருக்குப் பறக்கவிட்டார். அடுத்த ஓவரிலும் தனது அதிரடியைத் தொடர்ந்த அவர், மேலும் இரண்டு சிக்ஸர்களை விளாசினார்.
மொத்தமாக, 14 பந்துகளை மட்டுமே சந்தித்து, ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார்.மேலும், 11 பந்துகளில் 50 ரன்களை எட்டி முதல் தர கிரிக்கெட்டில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த வரலாற்றுச் சாதனை குறித்து பேட்டியளித்த ஆகாஷ், "நான் டிரஸ்ஸிங் ரூம் திரும்பும் வரை, நான் செய்த சாதனையின் முக்கியத்துவம் எனக்குத் தெரியாது. பிசிசிஐ வீடியோ ஆய்வாளர்களும், ஸ்கோரர்களும்தான் என்னிடம் வந்து சொன்னார்கள். அந்த நேரத்தில் அணிக்கு அதிரடி தேவைப்பட்டது. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஆனால், பந்து பேட்டில் நன்றாகப் படத் தொடங்கியதும், தொடர்ந்து அடிக்க முடிவு செய்தேன்" என்று தனது இயல்பான பணிவுடன் கூறினார்.
ஆகாஷின் இந்த வெற்றிக்குப் பின்னால் ஒரு கடுமையான உழைப்பும், போராட்டமும் இருக்கிறது. ஷில்லாங்கில் பிறந்த ஆகாஷின் தந்தை ஒரு இரும்பு பட்டறை தொழிலாளி, தாய் ஒரு தையல்காரர். நாட்டின் பல இளைஞர்களைப் போலவே, டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தனது கிரிக்கெட் வாழ்வை தொடங்கிய அவர், பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
வடகிழக்கு மாநில வீரர்களுக்காக பிசிசிஐ நடத்திய ஒரு தேர்வு முகாமில், ஜாம்பவான் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஞானேந்திர பாண்டே ஆகியோரின் பார்வையில் பட்டார். "நான் ஒரு பணக்காரக் குடும்பத்தில் இருந்து வரவில்லை. என் பள்ளியில் நடந்த போட்டிகளில் விளையாடினேன். பின்னர் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். அங்குதான் என் கிரிக்கெட் பயணம் தொடங்கியது," என்று தனது பயணத்தை நினைவுகூர்ந்தார் ஆகாஷ்.
ஆகாஷின் இந்த சாதனை, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மாவின் பாராட்டையும் பெற்றுள்ளது. "உங்கள் அதிரடி பேட்டிங் மேகாலயாவைப் பெருமைப்படுத்தியுள்ளது," என்று அவர் சமூக வலைதளங்களில் புகழ்ந்துள்ளார்.
ஐபிஎல் ஏலம் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான ஆகாஷின் பெயர் நிச்சயம் அணிகளின் கவனத்தை ஈர்க்கும். ஆனால், ஆகாஷோ, "ஐபிஎல் அணிகளின் கைகளில்தான் எல்லாம் இருக்கிறது. நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை. எனது கவனம், மணிப்பூருக்கு எதிரான அடுத்த ரஞ்சி போட்டி மீதுதான் இருக்கிறது" என்று கூறினார்.