டல்லாஸ்: மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) தொடரின் இறுதிப் போட்டியில், கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பான ஆட்டத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நிக்கோலஸ் பூரன் தலைமையிலான எம்ஐ நியூயார்க் அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
டல்லாஸில் உள்ள கிராண்ட் பிரேரி மைதானத்தில் நடைபெற்ற 2025 மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த எம்ஐ நியூயார்க் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான மொனாங்க் படேல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தது.

மொனாங்க் படேல் 22 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்தார். கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 ரன்கள், குன்வர்ஜீத் சிங் 22 ரன்கள் எடுத்தனர். எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் தரப்பில் அபாரமாகப் பந்துவீசிய லாக்கி பெர்குசன் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு முதல் ஓவரிலேயே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மிட்செல் ஓவன் முதல் பந்திலும், ஆண்ட்ரீஸ் கௌஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இருப்பினும், ஒரு முனையில் நிலைத்து நின்று போராடிய ரச்சின் ரவீந்திரா 41 பந்துகளில் 70 ரன்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவருக்குத் துணையாக கிளென் பிலிப்ஸ் 34 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
போட்டியின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசி ஓவரில் வாஷிங்டன் அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 15 ரன்களில் ஆட்டமிழந்தது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இதனால், எம்ஐ நியூயார்க் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று, மூன்று சீசன்களில் தங்களது இரண்டாவது எம்எல்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.
போட்டி முடிந்த உடன் பேசிய எம்ஐ நியூயார்க் அணியின் மூத்த வீரர் கீரான் பொல்லார்ட், லீக் சுற்றில் ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த தங்களை பலரும் ஒதுக்கிவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், அப்போதும் தனக்கு அணியின் மீது நம்பிக்கை இருந்ததாகவும், கணித ரீதியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கும் வரை தங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் கூறினார்.