மும்பை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான ஷாருக்கானுக்கு 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த சர்ச்சையின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.
2012 முதல் 5 ஆண்டுகளுக்கு ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்துக்குள் நுழையக்கூடாது என அப்போது அந்த மைதானத்தின் நிர்வாகம் தடை விதித்தது. அது அப்போது மிகப் பெரிய சர்ச்சையாக ஆனது. அதன் பின் 2017இல் அந்த தடை விலக்கப்பட்ட போதும் ஷாருக்கான் மும்பை வான்கடே மைதானத்திற்கு இதுவரை செல்லவில்லை.

2012 இல் ஷாருக்கான் தொடர்பான சர்ச்சை வெடித்த அந்தப் போட்டியில் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் வீழ்த்தி இருந்தது. அதன் பின் 12 ஆண்டுகளாக வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வெற்றி பெற முடியவில்லை. தற்போது 2024 ஐபிஎல் தொடரில் இந்த இரண்டு அணிகளும் வான்கடே மைதானத்தில் மோதின.
இந்த நிலையில் 2012இல் அன்றைய இரவு உண்மையில் என்ன நடந்தது என அப்போதைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இயக்குனர் ஜாய் பட்டாச்சாரியா கூறியிருக்கிறார். அவரது பதிவில், "கடைசியாக மும்பை வான்கடை மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்திய போது நானும் அப்போது வீரர்களுடன் அங்கு அமர்ந்திருந்தேன். அதன் பின்பு அந்த மைதானத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெறாத போதும் இன்று வெற்றி பெறக் கூடும். அதன் பின் கொல்கத்தா அணி இரண்டு சாம்பியன்ஷிப்புகளை வென்று விட்டது. அப்போது ஷாருக்கான் யாரையும் திட்டவில்லை நான் அங்கேதான் இருந்தேன். உங்கள் மகளை யாராவது சீண்டினால் அப்போது நீங்கள் அமைதியாக இருங்கள்" எனக்கு குறிப்பிட்டு இருக்கிறார்.
இதன் மூலம் அன்றைய இரவில் ஷாருக்கான் மகள் சுகானா கானை யாரோ ஒருவர் சீண்டி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபருடன் தான் ஷாருக்கான் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் செய்திகளில் இந்த சர்ச்சை வெளியான போது ஷாருக்கான், மும்பை வான்கடே மைதான பாதுகாவலர் ஒருவரை தாக்கியதாக மட்டுமே கூறப்பட்டிருந்தது.
ஆனால், உண்மையில் தன் மகளை சீண்டிய நபருடன் தான் ஷாருக்கான் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அது இப்போது ஜாய் பட்டாச்சாரியா மூலம் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஒரு கட்டத்தில் 57 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது.