மும்பை : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது அதிரடி பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டத்தை நிலைகுலைய வைத்தார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்கக் வீரர் டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நித்திஷ் குமார் 15 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். எனினும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி 124 ரன்கள் எடுத்து 7 விக்கெட்களை இழந்து இருந்த நிலையில் 17வது ஓவரில் கேப்டன் பாட் கம்மின்ஸ் களமிறங்கினார். ஹைதராபாத் அணியை 150 ரன்களுக்குள் சுருக்க திட்டமிட்டது மும்பை இந்தியன்ஸ். ஆனால், பாட் கம்மின்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்தார். இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார்.
இதை அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. பாட் கம்மின்ஸ் அதிரடி ஆட்டம் ஆடியதால் அந்த அணி 150 ரன்களை கடந்து ரன் குவித்தது. இதற்கு முன்பும் பாட் கம்மின்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக பேட்டிங் செய்து இருக்கிறார்.
அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 47.75 பேட்டிங் சராசரியும், 195 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான கடந்த ஆறு போட்டிகளில் அவர் இரண்டு முறை அரை சதம், இரண்டு முறை முப்பதுக்கும் அதிகமான ரன்கள் மற்றும் இரண்டு டக் அவுட் ஆகி இருக்கிறார். பேட்டிங்கில் மும்பை அணியை கதி கலங்க வைத்த பாட் கமின்ஸ் அடுத்து பந்து வீச்சிலும் பட்டையை கிளப்பினார். தான் வீசிய முதல் ஓவரில் ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அந்த ஓவரை மெய்டனாகவும் வீசினார்.
இந்தப் போட்டியில் பாட் கம்மின்ஸ் மட்டுமே மிக சிறப்பாக செயல்பட்டார். மற்ற ஹைதராபாத் பந்துவீச்சாளர்களால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டம் ஆடி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.