என்னையும் ஒண்ணு தாக்குச்சு.. ரொம்ப வியர்த்துச்சு.. கஷ்டப்பட்டேன்.. மியான்தத்தின் "மலரும் வைரஸ்கள்"!
கராச்சி : பாகிஸ்தான் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஜாவேத் மியான்தத், தன்னையும் 1992ம் ஆண்டு ஒரு வைரஸ் தாக்கியதாகவும், இதனால் 1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது ஆட சிரமப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
எங்கு பார்த்தாலும் கொரோனாவைரஸ் பீதிதான். விளையாட்டு உலகமே செயலிழந்து விட்டது. வீரர்களும் வீராங்கனைகளும் வீடுகளுக்குள் முடங்கிப் போயுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு வைரஸ் கதையை சொல்லியுள்ளார் மியான்தத். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், அதிரடி ஆட்டக்காரர், கடும் கோபக்காரர், இந்தியாவை கடுமையாக வெறுப்பவர் என ஏகப்பட்ட புகழ்களை கொண்டவர் மியான்தத்.

மியான்தத் நினைவுகள்
மியான்தத் தான் 1992ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றபோது ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி தனது முதல் உலகக் கோப்பையை அந்த ஆண்டு நடைபெற்ற தொடரில்தான் வென்றது. அதன் 18வது ஆண்டை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அமைதியான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த சமயத்தில் தனது வைரஸ் தாக்குதல் குறித்த விஷயத்தை சொல்லியுள்ளார் மியான்தத்.

1992 இறுதிப் போட்டி
இதுகுறித்து அவர் கூறுகையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டி 1992ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்தது. அதன் இறுதிப் போட்டியில் விளையாட பாகிஸ்தான் தயாராக இருந்த சமயத்தில் என்னை ஒரு மர்ம வைரஸ் தாக்கியது. நான் இறுதிப் போட்டியில் இதனால் சரியாக ஆட முடியாமல் அவதிப்பட்டேன். ஓடக் கூட முடியவில்லை. அசவுகரியமாக உணர்ந்தேன். எனது வழக்கமான ஷாட்களைக் கூட அடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மனதுக்குள் வைராக்கியம்
அந்த இறுதிப் போட்டி வீடியோவை இப்போது பார்த்தால் கூட நாங்கள் எப்படி ஜெயித்தோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் பேட் செய்தபோது அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தோம். ஆனால் எப்படியும் அவுட்டாகக் கூடாது. கடைசி விக்கெட்டாகத்தான் போக வேண்டும் என்று நான் மனதுக்குள் உறுதி எடுத்துக் கொண்டு போராடினேன் என்றார் மியான்தத்.

வியர்க்க விறுவிறுக்க ஆடினேன்
அப்போது என்னைத் தாக்கிய வைரஸ் குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எனக்கு நிறைய வியர்த்தது. போட்டிக்கு முன்பு டாக்டர்களிடம் கூட இதுகுறித்து கேட்டேன். அவர்களுக்கும் இதை விளக்கத் தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக எனக்கு எதிர்முனையில் இம்ரான் இருந்தார். இருவரும் இணைந்து மெதுவாக பார்ட்னர்ஷிப் போட்டு 50 ஓவர் வரை நான் நிலைத்து நின்றேன். மரியாதையான ஸ்கோரையும் எடுக்க முடிந்தது என்றார் மியான்தத்.


Click it and Unblock the Notifications