டோணிதான் வெற்றி பெற வைக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.. சொல்வது ஹஸ்ஸி
சிட்னி: ஒரு கேப்டனாக இன்னும் திறமையானவராகவே இருக்கிறார் டோணி. இந்திய அணிக்குத் தலைமை தாங்க அவர்தான் பொருத்தமான கேப்டன் என்று கூறியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோணி தலைமையின் கீழ் விளையாடியவர் ஹஸ்ஸி என்பது நினைவிருக்கலாம். ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் அடுத்தடுத்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா.
அதிலும் நேற்று வெற்றிக் கோட்டை நெருங்கிய நிலையில் ரொம்பக் கேவலமாக அதைப் பறி கொடுத்த விதம் ரசிகர்களை வெறுப்படைய வைத்துவிட்டது. குறிப்பாக டோணி அவுட்டான விதம் அனைவரையும் கடுப்பாக்கி விட்டது.
இந்த நிலையில் டோணிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் ஹஸ்ஸி. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி...

அவரிடம் இன்னும் திறமை உள்ளது
நிச்சயம் டோணி தொடர்ந்து கேப்டனாக செயல்பட வேண்டும். எத்தகைய சூழலையும் திறமையாக கையாளக் கூடிய திறமை படைத்தவர் அவர்.

எல்லா நேரமும் அடிக்க முடியாது
வெளியிலிருந்து பார்க்கும்போது எல்லாமே ஈசியாகத்தான் தெரியும். எல்லா நேரமும் அடித்து ஆட முடியாது. 30 பந்து 60 ரன் என்று எல்லா நேரமும் செய்ய முடியாது.

நல்ல பவுலர்கள்
ஆஸ்திரேலியாவிடம் நல்ல பவுர்கள் உள்ளனர். அவர்களுக்கு டோணியின் பலம், பலவீனம் தெரியும். எனவே எப்போதும் சிறப்பாக ஆட முடியும் என்று கூற முடியாது.

பினிஷிங்கை கற்றுக் கொள்ள வேண்டும்
இந்திய அணியின் இளம் வீரர்கள், பினிஷிங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை டோணியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.அவரே எல்லா நேரமும் அதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது.

சிறப்பாக சேவையாற்றி விட்டார்
இந்தியாவுக்காக நீண்ட காலம் மிகச் சிறந்த சேவையை டோணி ஆற்றி விட்டார். இந்தப் பொறுப்பில் அவர் நினைக்கும் வரை அவர் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மோசமாக எல்லாம் ஆடவில்லை
நான்கு போட்டிகளில் இந்தியா தோல்வியுற்றதால் அவர்கள் மோசமாக விளையாடினார்கள் என்று கூற முடியாது. நான்கு போட்டிகளிலுமே அவர்கள் சிறப்பாக பேட் செய்துள்ளனர். அது முக்கியமானது. 3 போட்டிகளில் அவர்கள் 300 ரன்களைத் தாண்டியுள்ளனர். நிச்சயம் நன்றாகவே ஆடியுள்ளனர்.

சேஸிங்கில் சொதப்பி விட்டனர்
உண்மையில் நான்காவது போட்டியில் சிறப்பாகவே சேஸ் செய்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களது வேகம் சீர்குலைந்து போனது என்றார் ஹஸ்ஸி.


Click it and Unblock the Notifications