வேண்டவே வேண்டாம் சாமி! தேடி வந்த வாய்ப்பை மறுத்த மைக்கேல் ஹஸி
டெல்லி: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்படும் வாய்ப்பை முன்னாள் ஆஸ்திரேலிய பேட்டர் மைக்கேல் ஹசி, நிராகரித்துள்ளார். இங்கிலாந்தின் புதிய டெஸ்ட் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்ட ஹசியை, பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பிற்காக பிளெமிங்கும் ஈசிபியும் அணுகினர்.
இருப்பினும், முன்னாள் இடதுகை ஆஸ்திரேலிய பேட்டரான மைக்கேல் ஹசி இந்த சலுகையை ஏற்க மறுத்துள்ளார். அதன் படி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா வழங்கிய பகுதிநேர ஆலோசகர் பொறுப்பை ஏற்பதற்காகவே இங்கிலாந்து அணியின் சலுகையை ஹசி நிராகரித்துள்ளார். இந்த பகுதிநேரப் பொறுப்பு, 'தி ஹண்ட்ரட்' மற்றும் பிற டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக செயல்படவும், ஆஸ்திரேலியாவின் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக தொடரவும் அவருக்கு கூடுதல் வாய்ப்பை வழங்கும் என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

மைக்கேல் ஹசி முன்னதாக 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் போது, இங்கிலாந்து அணியின் பகுதிநேர ஆலோசகராகப் பணியாற்றினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஹசி இந்த வாய்ப்பை நிராகரித்ததைத் தொடர்ந்து, மார்கஸ் ட்ரெஸ்கோதிக்கை இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவே நீட்டிக்க ஈசிபி முடிவு செய்யக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக ட்ரெஸ்கோதிக் செயல்பட்டு வருகிறார். இவரது வழிகாட்டுதலில், மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்ட ஸ்டீபன் பிளெமிங், டிசம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது தனது அதிகாரப்பூர்வ பணியைத் தொடங்கவுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2027 இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட இழந்துவிட்டாலும், இந்த நடப்பு சைக்கிளல் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் உயர்ந்த இடத்தை பிடிக்க அந்த அணி முயலும்.


Click it and Unblock the Notifications

