மிட்செல் மார்ஷ் வரலாற்று சாதனை.. ஒரே ஆண்டில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ரெக்கார்டு
லண்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டி20 கேப்டன் மிட்செல் மார்ஷ், ஒரே காலண்டர் ஆண்டில் 1,500 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹண்ட்ரெட்' கிரிக்கெட் தொடரில், சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிக்காக விளையாடி வரும் மிட்செல் மார்ஷ், லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்ற வெல்ஷ் ஃபயர் அணிக்கு எதிரான போட்டியில் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 2026 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அவரது மொத்த ரன் எண்ணிக்கை 1,502 ஆக உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் அவர் 35 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை எட்டியுள்ளார்.

இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட் 73 போட்டிகளில் விளையாடி 1,462 ரன்கள் எடுத்ததே ஒரே ஆண்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது அந்த சாதனையை மிட்செல் மார்ஷ் முறியடித்துள்ளார். 2026 ஆம் ஆண்டில் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதில் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 13 போட்டிகளில் 563 ரன்களும், பிக்பாஷ் லீக்கில் 8 போட்டிகளில் 335 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 7 போட்டிகளில் 230 ரன்களும், தி ஹண்ட்ரெட் தொடரில் 7 போட்டிகளில் 374 ரன்களும் குவித்துள்ளார்.
தி ஹண்ட்ரெட் தொடரில் இன்னும் 51 ரன்கள் எடுத்தால், இந்த தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ஜேம்ஸ் வின்ஸின் (424 ரன்கள்) சாதனையை மார்ஷ் முறியடிப்பார். மேலும், இந்த ஆண்டில் 93 சிக்ஸர்களை விளாசியுள்ள அவர், இன்னும் 7 சிக்ஸர்கள் அடித்தால் ஒரே ஆண்டில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த உலக சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் (2024 இல் 2,331 ரன்கள்) தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
