வெறும் 3.4 கோடி தான்.. கே எல் ராகுலின் ரெக்கார்டை உடைத்த லக்னோ ரன் மெஷின் மிட்செல் மார்ஷ்
அகமதாபாத்: ஆஸ்திரேலிய டி20 அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காகப் பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார். நேற்று நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். துவக்க வீரராகக் களமிறங்கிய அவர் 64 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை அடித்து இருந்தார். 182.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
லக்னோ அணி அவரை வெறும் 3.4 கோடிக்கு வாங்கிய நிலையில், இந்த ஆண்டு அந்த அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக மாறி இருக்கிறார் மிட்செல் மார்ஷ். நேற்று அவர் அடித்த சதம், இந்த ஆண்டு அவரது ஆறாவது ஐம்பது ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர் ஆகும். இதன் மூலம் லக்னோ அணிக்காக ஒரே ஐபிஎல் சீசனில் 50 ரன்களுக்கும் அதிகமாக அதிக முறை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை கே.எல். ராகுலுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு கே.எல். ராகுல் ஆறுமுறை 50 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது மிட்செல் மார்ஷ் அந்த சாதனையைச் சமன் செய்திருக்கிறார். அடுத்து, ஒரே ஆண்டில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
கே.எல். ராகுல் 2022 ஆம் ஆண்டு 616 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். 2024 ஆம் ஆண்டு 520 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்திலும் அவரே இருந்தார். தற்போது மிட்செல் மார்ஷ் 530 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த சாதனைப் பட்டியலில் கே.எல். ராகுல் தொடர்ந்து இடம்பெற்று இருக்கும் நிலையில், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடந்த ஆண்டுடன் நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்செல் மார்ஷ் அடித்த சதத்தாலும், நிக்கோலஸ் பூரன் ஆடிய 27 பந்துகளில் 56 ரன்களாலும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 235 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications