டெல்லி: ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக அடுத்த மூன்று போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு தான் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோள்பட்டை மற்றும் முழங்கை காயத்தால் ஸ்டார்க் ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது வெளியான தகவலின் படி, ஏப்ரல் 21 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக அவர் களமிறங்க வாய்ப்புள்ளது.

இதன் விளைவாக, ஏப்ரல் 8 அன்று குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 11 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ், மற்றும் ஏப்ரல் 18 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிரான மூன்று முக்கிய போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் ஸ்டார்க் இன்றி விளையாடும்.

மிட்செல் ஸ்டார்க் இல்லாதபோதும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி இந்த சீசனில் வலுவான தொடக்கத்தை கண்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டிகளில், சிறப்பான பந்துவீச்சால் வெற்றி பெற்றுள்ளது.
முகேஷ் குமார் புதிய பந்திலும், லுங்கி இங்கிடி மற்றும் டி. நடராஜன் டெத் ஓவரிலும் சிறப்பாக வீசினர். நடுப்பகுதியில், அக்சர் படேல், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் அடங்கிய சுழற்பந்து கூட்டணி எதிரணியைத் திணறடித்தது.

கடந்த மாதம், ஸ்டார்க் சமூக வலைத்தளத்தில், "இந்திய ஊடகங்களில் சிலர் கூறும் தவறான கருத்துக்கள் இருந்தபோதிலும், என் தோள்பட்டை மற்றும் முழங்கை காயத்திற்கு நான் தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன். இந்த காயத்தின் தீவிரத்தை நான் அறியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.அவரது வருகை, ஏற்கனவே வலுவான டெல்லி கேபிடல்ஸின் பந்துவீச்சை மேலும் பலப்படுத்தும். ஸ்டார்க் அணி நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.