இந்தூர் : இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது.
இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி மிட்செல் ஸ்டார்க்கை தயார் செய்துள்ளது.
அவர் காயத்தால் நீண்ட காலம் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை. முதல் ஒருநாள் போட்டியிலும் அவர் இன்னும் முழுமையாக மீளாததால் பங்கேற்கவில்லை.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மிகத் துல்லியமாக பந்துவீசும் வேகப் பந்துவீச்சாளரான அவர் இந்திய அணியின் பேட்டிங்கின் டாப் ஆர்டரை காலி செய்யும் திறன் கொண்டவர். ஆனால், அவரது ஃபார்ம் இப்போது எப்படி இருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
இந்தப் போட்டியில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே அவரின் உலகக்கோப்பை வாய்ப்பு அமையும். அதே சமயம் அவர் இரண்டாவது போட்டியில் தன் பழைய ஃபார்மில் பந்து வீசினால் இந்திய அணிக்கு பெரும் சிக்கல் காத்திருக்கிறது.
மிட்செல் ஸ்டார்க் போன்ற துல்லிய வேகப் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளில் உள்ளனர். அந்த வகையில் ஸ்டார்க்கை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்தே இந்திய அணி மற்ற அணிகளை சமாளிக்குமா? என்பதை சொல்ல முடியும்.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ், ஸீன் அபாட் மட்டுமே வேகப் பந்துவீச்சாளர்களில் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். மார்கஸ் ஸ்டோனிஸ் மோசமாக வீசி ரன்களை வாரிக் கொடுத்து இருந்தார். எனவே, ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஸ்டார்க் வருகை பெரிய தன்னம்பிக்கையை அளித்து இருக்கும்.
கே எல் ராகுல் தலைமையிலான அதே அணி தான் இந்தப் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பும்ராவுக்கு பதில், முகமது சிராஜ் ஆட வாய்ப்பு உள்ளது. ஷமி கடந்த போட்டியில் 5 விக்கெட்கள் வீழ்த்தி இருப்பதால் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.