
மிதாலியின் 10,000 ரன்கள் சாதனை
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகளுக்கிடையில் இன்றைய தினம் லக்னோவில் 4வது ஒருநாள் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3வது போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து சாதனை மேற்கொண்டார். இந்த சாதனையை புரிந்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

7,000 ரன்களை கடந்து சாதனை
இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாடி 45 ரன்களை எடுத்துள்ளார் கேப்டன் மிதாலி ராஜ். மேலும் இந்த போட்டியின்மூலம் அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 7,000 ரன்களை எடுத்துள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக 6000 ரன்களை எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் மேற்கொண்டிருந்தார்.

முதல் வீராங்கனை
இந்த வரிசையில் அடுத்த இடத்தில் 5992 ரன்களை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ். கடந்த 21 ஆண்டுகள் மற்றும் 262 நாட்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடிவரும் மிதாலி ராஜ், 20 ஆண்டுகளாக களத்தில் ஆடிவரும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

213 ஒருநாள் போட்டிகள்
இதுவரை 213 போட்டிகளில் விளையாடி அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள வீராங்கனை மற்றும் 136 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள முதல் வீராங்கனை என்ற பெருமையையும் மிதாலி பெற்றுள்ளார். மேலும் கேப்டனாக அதிக ஒருநாள் போட்டிகளில் அதாவது 83 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள வீராங்கனையாகவும் அவர் சாதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











