பொளந்து கட்டிய மிதாலி ராஜ்.. மிரண்டு போன நியூசிலாந்து பவுலர்கள் !
டெர்பி: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில், நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் சதம் விளாசினார்.
11வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டன. மேற்கு இந்திய தீவுகள், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன.

இந்த நிலையில் எஞ்சிய ஒரு அரை இறுதி இடத்தை நிர்ணயிக்கும் முக்கிய ஆட்டத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாசில் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, பூணம் ரவுத் துவக்கம் தந்தனர். ஸ்மிருதி மந்தனா 13 ரன்னிலும், பூணம் 4 ரன்னிலும் நடையைக் கட்டினர்.
அடுத்தாக களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் அபாரமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களைத் திணறடித்து விட்டார். நிலைத்து நின்று ஆடியதோடு, அதிரடி சதமும் விளாசினார் மிதாலி ராஜ். 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் உதவியுடன் 109 ரன்களை அவர் குவித்தார்.
அதேபோல் கவுர் 60, கிருஷ்ணமூர்த்தி 70 ரன்களை எடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. 266 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து 79 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா.


Click it and Unblock the Notifications