ஓக்லாந்து: அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான பந்து வீசியதின் மூலம் சியாட்டல் அணியை 60 ரன்களில் சுருட்டி அபார வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சியாட்டல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் கான்வே 13 ரன்களிலும், டுபிளசிஸ் 7 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

சாய் தேஜா மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். நடு வரிசையில் டேரல் மிட்செல் 25 ரன்கள் சேர்க்க, மார்க்கஸ் ஸ்டோனிஸ் அபாரமாக விளையாடி நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு 12 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இறுதியில் மிலிண்ட் குமார் 18 ரன்களும், சுபம் 15 ரன்களும் எடுக்க டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டல் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒன்பது ரன்களில் ஆட்டம் இழக்க, கைல் மெயர்ஸ் டக் அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் கிளாசன் டக் அவுட் ஆனார். அதேபோன்று சிக்கந்தர் ராசா நான்கு ரன்களிலும், சுஜித் நாயக் ஐந்து ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 13 புள்ளி 5 ஓவரில் அணி 60 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் சியாட்டல் அணி இழந்தது. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சியா உல் ஹக் 3 விக்கெட்டுகளையும், நாண்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கின்றனர். இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வெற்றியை டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. ஐபிஎல், சவுத் ஆப்பிரிக்கா டி20 மற்றும் எம்எல்சி ஆகிய தொடரில் சிஎஸ்கே அணி நிர்வகிக்கும் அணிகள் விளையாடி வருகிறது. இதில் ஐபிஎல் தவிர வேறு எந்த தொடரிலும் சிஎஸ்கே நிர்வகிக்கும் அணி சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையில் தற்போது டிஎஸ்கே அணி இதை மாற்றுமா என்று எதிர்பார்ப்பு இணைந்துள்ளது.