
இங்கிலாந்து சுற்றுப்பயணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டுக்கு டெஸ்ட் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கு முன் சில வாரங்கள் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பின் இங்கிலாந்து கிளம்ப வீரர்கள் தயார் ஆயினர்.

10 வீரர்களுக்கு கொரோனா
இங்கிலாந்து செல்லும் முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறியது. ஒரே நேரத்தில் இத்தனை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீடுகளில் தனிமை
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான பாகிஸ்தான் வீரர்கள் தங்கள் வீடுகளில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். அந்த 10 வீரர்களில் ஒருவர் தான் முகமது ஹபீஸ். அவர் பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஆவார்.

பாதிப்பு இல்லை
முகமது ஹபீஸ் தனக்கும், தன் குடும்பத்துக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பரிசோதனை செய்து இருந்தாலும், ஹபீஸ் மீண்டும் தனக்கு பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்
முகமது ஹபீஸின் குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றே முடிவு வந்துள்ளது. இதை அடுத்து அவர் இந்த தகவலை ட்விட்டரில் ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார். தான் எடுத்த கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவை புகைப்படமாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

கேள்வி
இதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எடுத்த பரிசோதனையின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. எப்படி ஒரே நேரத்தில் பத்து வீரர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக முடியும்? எப்படி இது அணிக்குள் பரவியது? பரிசோதனை முடிவுகள் சரியானதா? என இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மாறுபட்ட முடிவுகள் கிடைக்கலாம்
சிலர் பரிசோதனையில் மாறுபட்ட முடிவுகள் கிடைக்கலாம். ஹபீஸ் மீண்டும் ஒரு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளனர். மற்ற ஒன்பது வீரர்களும் கூட மீண்டும் பரிசோதனை செய்து கொண்டால் உண்மை நிலை தெரிய வரக் கூடும்.

விமர்சனம்
வீரர்களை பயிற்சி செய்ய வைக்கும் முன்பே பரிசோதனை செய்து, சமூக இடைவெளியை கடைபிடித்து இருந்தால் இத்தனை சிக்கல் ஏற்பட்டு இருக்குமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது விமர்சனம் எழுப்பப்பட்டு இருக்கும் நிலையில் அவர்கள் செய்த கொரோனா வைரஸ் பரிசோதனை மீதும் விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











