மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, துணை கேப்டனாக வலம் வந்த சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் இந்தத் திட்டமிடலை கைஃப் கடுமையாக சாடியுள்ளார்.
தனது யூடியூப் சேனலில் இது குறித்துப் பேசிய முகமது கைஃப், "டி20 போட்டிகளில் சுப்மன் கில்லை விடச் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்று தேர்வுக்குழுவினருக்கு முன்பே தெரியும். ஆனால், கடந்த 2-3 மாதங்களாக ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் சர்மா போன்றவர்களை வளர்த்தெடுப்பதை விட்டுவிட்டு, ஃபார்மில் இல்லாத கில்லைத் துணை கேப்டனாக வைத்துத் தேவையில்லாத பரிசோதனை செய்தார்கள். இது இந்திய கிரிக்கெட்டிற்குச் செய்த மிகப்பெரிய நேர விரயம். இது முழுக்க முழுக்கத் தேர்வுக்குழுவின் தவறு" என்று ஆவேசப்பட்டார்.

திடீரென அக்சர் படேலைத் துணை கேப்டனாக நியமித்தது குறித்தும் கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். "அக்சர் படேல் இப்போது துணை கேப்டனாகத் திரும்பியுள்ளார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவரை அந்தப் பொறுப்பில் வைத்திருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், கேப்டன் சூர்யகுமார் யாதவ் இல்லாத நேரத்தில் அணியை வழிநடத்தும் பக்குவத்தை அவர் கற்றிருப்பார். சூர்யாவிற்கு காயம் ஏற்பட்டால் அணியை வழிநடத்த அக்சர் தயாராக இருந்திருப்பார். அந்தக் கற்றலுக்கான வாய்ப்பை தேர்வுக்குழு வீணடித்துவிட்டது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "சுப்மன் கில்லை நீக்கியது சரியான முடிவு தான். ஆனால், அது மிகவும் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17-18 இன்னிங்ஸ்களாக அவர் ரன் அடிக்கவில்லை. இன்னும் எத்தனை வாய்ப்புகள் கொடுப்பீர்கள்? வேறு வழியில்லாமல் தான் இப்போது அவரை நீக்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தத் தாமதமான முடிவால், தகுதியான வேறு சில வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு மற்றும் நேரம் வீணாகிவிட்டது" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
சுப்மன் கில் ஆசியக் கோப்பைக்குப் பிறகு ஆடிய எந்தப் போட்டியிலும் 47 ரன்களைத் தாண்டவில்லை என்பதும், தென்னாப்பிரிக்கத் தொடரில் 3 போட்டிகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் மீண்டும் துவக்க வீரராக வந்துள்ளார்.