Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெட்டிங் விளம்பரம் பிடிக்காதா.. உனக்கு கேப்டன் பதவி கிடையாது.. பாகிஸ்தான் கிரிக்கெட் கேலிக்கூத்து

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் முகமது ரிஸ்வான். அவருக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரிஸ்வானின் இந்தத் திடீர் நீக்கத்திற்கு, சூதாட்ட நிறுவனங்களை விளம்பரப்படுத்த அவர் மறுத்ததே முக்கிய காரணம் என்று வெளியாகி உள்ள தகவல், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கு ஷஹீன் அப்ரிடி கேப்டனாகச் செயல்படுவார் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரிஸ்வானின் கேப்டன்சி பறிப்பு குறித்து எந்தவித விளக்கமும் அந்த அறிக்கையில் அளிக்கப்படவில்லை. இது பல்வேறு சந்தேகங்களையும், விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய வருமான ஆதாரமாக இருக்கும் சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கவும், அவற்றை ஊக்குவிக்கவும் முகமது ரிஸ்வான் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தனது மத நம்பிக்கைகளுக்கு எதிராகச் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் உறுதியாகத் தெரிவித்ததாக பிசிபி வட்டாரங்கள் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Mohammad Rizwan Sacked as Pakistan ODI Captain Stance Against Betting Firms Cited as Key Reason

"சூதாட்ட நிறுவனங்களை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ரிஸ்வான் பிசிபிக்குத் தெரிவித்திருந்தார், இதுவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணம். சூதாட்ட நிறுவனங்களுடன் பிசிபி ஒத்துழைப்பதற்கு அவர் எதிராக இருந்தார்" என்று பிசிபி வட்டாரத்தை மேற்கோள்காட்டி அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக, பல கிரிக்கெட் வாரியங்கள் தங்களது வருமானத்தை அதிகரிக்க, மறைமுக சூதாட்ட நிறுவனங்களுடன் (surrogate betting firms) ஒப்பந்தம் செய்து வருகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனங்களின் விளம்பரங்களில் கேப்டனாக இருக்கும் வீரர் பங்கேற்பது வழக்கம். ஆனால், ரிஸ்வான் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், வாரியத்திற்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதாகத் தெரிகிறது.

குறுகிய கால கேப்டன்சி:

முகமது ரிஸ்வானின் கேப்டன்சி பயணம் குறுகிய காலமே நீடித்தது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற கடினமான சுற்றுப்பயணங்களில் பாகிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்கி, மதிப்புமிக்க தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்தார். இருப்பினும், இந்த ஆண்டு உள்நாட்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அணி சிறப்பாகச் செயல்படத் தவறியது, அவரது பதவிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது.

தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோர் இடையே நடந்த சந்திப்பிற்குப் பிறகே, கேப்டன் மாற்ற முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கேப்டன்கள் மாற்றப்படுவது புதிதல்ல என்றாலும், ஒரு வீரரின் கொள்கை மற்றும் தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது இதுவே முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Story first published: Wednesday, October 22, 2025, 14:14 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+