உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்.. பாகிஸ்தான் அணியா இது.. இந்திய ஆடுகளத்தில் சதம் விளாசிய ரிஸ்வான்!
ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முகமது ரிஸ்வானின் அபார சதத்தால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 345 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்திய ஆடுகளங்களுக்கும், தட்ப வெட்ப சூழலுக்கும் வீரர்கள் தங்களை தகவமைத்து கொள்வதற்கான காலமாக இது உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தங்களது முதல் பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து களமிறங்கியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் முகமது நவாஸ் மற்றும் ஆகா சல்மான் ஆகிய இருவர் மட்டுமே இந்திய ஆடுகளங்களில் விளையாடியுள்ளனர். அதுவும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தான். இந்த நிலையில் ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அதில் இமாம் உல் ஹக் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் கூட்டணி இணைந்து ஸ்கோரை உயர்த்தியது.
3வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் கேப்டன் பாபர் அசாம் 84 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 94 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
அதேபோல் சாவுத் சக்கீல் 53 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 345 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடருக்கு முன் பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரர்கள் நல்ல ஃபார்மில் இருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications