“காதலியின் பிள்ளைகளுக்கு எல்லாம் .. சொந்த மகளுக்கு ஒண்ணுமில்லை” முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் புகார்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது மகளைப் புறக்கணித்து, காதலிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான முகமது ஷமிக்கும், அவரது மனைவி ஹாசின் ஜஹானுக்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஷமி மீது வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹாசின் ஜஹான் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் ஷமி மீது மீண்டும் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

மகளின் படிப்புக்கு எதிர்ப்பு
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாசின் ஜஹான் வெளியிட்டுள்ள பதிவில், "எனது மகளை ஒரு நல்ல பள்ளியில் சேர்ப்பதை எதிரிகள் விரும்பவில்லை. ஆனால், அல்லாவின் அருளால் அவளுக்கு மிகச் சிறந்த சர்வதேசப் பள்ளியில் இடம் கிடைத்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.
'பெண் பித்தர்' என ஆவேசம்
மேலும் அவர், "என் மகளின் தந்தை, ஒரு கோடீஸ்வரராக இருந்தும், பெண் பித்தர் என்பதால் அவளது (மகளின்) வாழ்க்கையுடன் விளையாடுகிறார். அதே சமயம், தனது காதலிகளின் பிள்ளைகளைச் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்கிறார். சில காதலிகளுக்காக பிசினஸ் கிளாஸ் விமானங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்யும் அவருக்கு, சொந்த மகளின் படிப்பு செலவுக்குப் பணம் இல்லை," என ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
ஜீவனாம்ச வழக்கு மற்றும் தீர்ப்பு
ஏற்கனவே, ஹாசின் ஜஹான் மற்றும் அவர்களது மகளுக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் முகமது ஷமிக்கு உத்தரவிட்டிருந்தது. இதில், ஹாசின் ஜஹானுக்கு ரூ.1.50 லட்சமும், மகளுக்கு ரூ.2.50 லட்சமும் வழங்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
2014-ல் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதிக்கு 2015-ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. 2018-ல் ஷமி மீது ஹாசின் ஜஹான் குடும்ப வன்முறை புகார் அளித்ததை அடுத்து இருவரும் பிரிந்தனர். இந்த ஜீவனாம்சத் தீர்ப்பைத் தனது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக ஹாசின் ஜஹான் குறிப்பிட்டிருந்தார்.
ஷமியின் வருமானத்தோடு ஒப்பிடும்போது இந்தத் தொகை மிகவும் குறைவு என்றும், தாங்கள் பிரிந்த சமயத்தில் கோரிய தொகையை விட இது குறைவு என்றும் அவர் தெரிவித்திருந்தார். முகமது ஷமி தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருந்து வரும் நிலையில், அவரது மனைவி ஹாசின் ஜஹானின் இந்த புதிய குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications