பெங்களூரு: நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா - நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன. பெங்களூரு மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்திய அணியை பொறுத்தவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வென்று, அரையிறுதி சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.

அரையிறுதி சுற்றில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சியில் சுப்மன் கில், பிரசித் கிருஷ்ணா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
பிரசித் கிருஷ்ணா தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டில் அவர் இந்திய அணி பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பவுலர்களில் 2 பேருக்கு ஓய்வு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குல்தீப் யாதவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் பவுலர்களான சிராஜ் மற்றும் பும்ரா இருவருக்கும் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தலைமையில் இருவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. பவுலிங் பயிற்சியை விடவும் பேட்டிங் செய்வதற்கு அதிக நேரம் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஜடேஜாவுடன் முடிவடைவதால், பவுலர்களும் சிறியளவில் பேட்டிங் செய்ய அவசியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெய்லண்டர்களை தயார் செய்யும் வகையில் சிராஜ் மற்றும் பும்ராவுக்கு முன்கூட்டியே பேட்டிங் பயிற்சி அளிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.