
ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வர சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுவதால், ஐபிஎல் தொடர் நடப்பதிலும் சிக்கல் உள்ளது. அது தோனிக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

2020 டி20 உலகக்கோப்பை
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடர் முதல் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் தாமாகவே விலகி இருப்பதாக கூறப்பட்டது. எனினும், அவர் 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆட முயற்சி செய்வதாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் கூறியது.

ஐபிஎல் பயிற்சி
அது உண்மை தான் என்பது போல 2020 ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபிக்க அதிரடியாக தயார் ஆகி வந்தார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அதிரடி பேட்டிங் பயிற்சி செய்து வந்தார். ஆனால், இடையே ஐபிஎல் தொடருக்கு கொரோனா வைரஸால் சிக்கல் எழுந்துள்ளது.

வாய்ப்பு இல்லை
இந்த நிலையில், ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு வர வாய்ப்பு இல்லை என பலரும் கூறி வருகிறார்கள். அது பற்றி அசாருதீன் தன் கருத்தை கூறி உள்ளார். உள்ளூர் போட்டிகளில் ஆடி பயிற்சி பெற்றால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்ய முடியும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

தனிப்பட்ட முடிவு
"அவருக்கு என்ன வேண்டும் என்பதை என்னை விட தோனி தான் விளக்கமாக கூற முடியும். அது அவரது தனிப்பட்ட முடிவு, இப்போது பார்த்தால், நிலைமை அந்த அளவுக்கு சரியாக இல்லை. அதனால், தான் ஐபிஎல் தொடர் கூட நடக்கவில்லை" என்றார் அசாருதீன்.

சிறிது காலம் ஆகலாம்
"அனைத்து விஷயங்களும் சரியான அளவில் நடக்க சிறிது காலம் ஆகலாம். ஆனால், தோனியைப் பொறுத்தவரை அது அது அவரின் தனிப்பட்ட முடிவு" என ஐபிஎல் தொடர் நடப்பது மற்றும் தோனி இந்திய அணிக்கு ஆட விரும்புவது பற்றி பேசினார் அசாருதீன்.

பயிற்சி அவசியம்
"தேர்வுக் குழு நிச்சயம் அவரின் செயல்பாட்டை கவனிக்கும். ஏனெனில், நீண்ட இடைவெளிக்கு பின் ஆடுவது அத்தனை எளிதல்ல. மேட்ச்களில் ஆடிய பயிற்சி அவசியம் தேவை. நீங்கள் எத்தனை பெரிய வீரராக இருந்தாலும், சில போட்டிகளில் நீங்கள் ஆடித் தான் ஆக வேண்டும்." என்றார் அசாருதீன்.

அணிக்கு திரும்புவது கடினம்
தோனி எத்தனை பெரிய வீரராக இருந்தாலும் ஐபிஎல் அல்லது உள்ளூர் போட்டிகளில் ஆடி தன்னை நிரூபித்தால் தான் இந்திய அணியில் இடம் பெற முடியும் என்பதையே இவ்வாறு கூறி உள்ளார் அசாருதீன். எனவே, ஐபிஎல் தொடர் நடக்கவிட்டால், தோனி அணிக்கு திரும்புவது கடினம் என்றே கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications