மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் பளிச்சென்று பதில் ஒன்றை அளித்துள்ளார். கபில்தேவ் முதல் ரோகித் சர்மா வரை ஒவ்வொரு கேப்டனுமே ஒவ்வொரு சாதனைகளை செய்திருக்கிறார்கள்.
இதில் கபில்தேவ் முதல் முறையாக உலக கோப்பை பெற்று தந்திருக்கிறார். தோனி மூன்று முறை ஐசிசி கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார்.கங்குலி இந்திய அணியின் தோற்றத்தையே மாற்றி புத்துணர்ச்சி கொடுத்தவர்.

விராட் கோலி டெஸ்டில் இந்திய அணிக்கு தனி பெயரை வாங்கித் தந்திருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பில்டராக விளங்கியவர் முகமது கைஃப் அவரிடம் இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக விளங்கியவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் கூட யோசிக்காமல் பதிலளித்த முகமது கைஃப்,நான் கங்குலி என்று தான் சொல்வேன்.
ஏனென்றால் கங்குலி இளம் வீரர்களுக்கு எப்போதுமே ஆதரவு கொடுத்து வாய்ப்பு தருவார். அவர் என்னிடம் சொன்னது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. எதைப்பற்றியும் கவலைப்படாதே களத்திற்கு சென்று உன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறினார். எனக்கு எப்போதுமே துணையாக நின்றார். ஒரு இளம் வீரருக்கு கங்குலி போன்ற கேப்டன் கிடைத்தால் நிச்சயம் அவர் இந்திய அணிக்கு சிறந்த வீரராக விளங்குவார்.
கங்குலி இந்திய அணியின் பிரமாதமான கேப்டனாக விளங்கினார். கேப்டன் என்று நான் சொல்வது ஒரு அணியின் சிறந்த தலைவனாக இருந்தார் என்பதை குறிக்கும். அணியை முன்னின்று வழி நடத்தினார். அணிக்குத் தேவையான வீரர்களை சரியாக தேர்வு செய்வதில் கங்குலி வல்லவர். வீரர்களை தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு கடைசிவரை துணை நின்று இந்திய அணியை உருவாக்கினார் என்று கங்குலியை அவர் பாராட்டினார்.
கையிப் 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் 83 போட்டிகளில் கங்குலி தான் கேப்டனாக இருந்திருக்கிறார். 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய கையிப் 2753 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்களும் 17 அரை சதமும் அடங்கும். இந்த நிலையில் 49 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த கங்குலி 42.85 வெற்றி சதவீதமாக வைத்திருக்கிறார்.
இதேபோன்று 136 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய கங்குலி 52.5 வெற்றி சதவீதமாக வைத்திருக்கிறார். யுவராஜ்,கைப், தோனி, ஹர்பஜன்சிங், ஜாகிர் கான், நெஹ்ரா உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு கங்குலி தான் அணியில் வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.