மும்பை : உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் காயம் காரணமாக தற்போது ஓய்வில் இருக்கிறார்.
அவர் காயம் குணமடைய ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை தேவைப்படும் என ரோகித் சர்மா கூறிய நிலையில் அந்த இடத்திற்கு தற்போது அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய அஜித் அகார்கர் அஸ்வின் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவாரா இல்லையா என்பது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கூறினார் .மேலும் அக்சர் பட்டேல் காயத்திலிருந்து மீண்டு வருவார் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அக்சர் பட்டேல் குறித்து தற்போது முகமது கைஃப் உண்மை ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதில் பேசிய அவர் அக்சர் பட்டேலுக்கு மட்டும் காயம் ஏற்படவில்லை என்றால் நாம் அஸ்வினை இந்த காட்சியிலே நாம் பார்த்திருக்க மாட்டோம். தற்போது அக்சர் பட்லேலுக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதில் இருந்து மீண்டு வர சில காலம் ஆகலாம்.ஆனால் இந்திய அணி தரப்பில் அவர் ஒரு வாரத்தில் மீண்டும் வந்து விடுவார் என்று கூறுகிறார்கள்.
உண்மை என்னவென்றால் இப்படி ஒரு காயம் ஏற்பட்டால் அதிலிருந்து குணமடைந்து வர இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகலாம். இது முன்பே தெரிந்துதான் இந்திய அணி தற்போது அனுபவம் நிறைந்த அஸ்வினை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் அஸ்வினை சேர்க்க வேண்டுமா? வாஷிங்டனை சேர்க்க வேண்டுமா என்று சிலர் கேட்டு வருகிறார்கள். என்னை கேட்டால் அஸ்வினை வாஷிங்டன் சுந்தரோடு ஒப்பிடவே கூடாது.
ஏனென்றால் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனால் அனைவரின் முதல் சாய்ஸ் ஆகவும் அஸ்வின் தான் உள்ளார் என்று கைப் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையில் அஸ்வின் கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் அஸ்வின் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஸ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் 21 மாதங்களுக்கு பிறகு திரும்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.