மும்பை: இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடிய 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தும் ஒரு போட்டியில் கூட அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படவில்லை என முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டு இருந்தார். அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை அளித்து, தான் விளையாடிய தொடர்களில் எல்லாம் தனது அணி கோப்பை வெல்ல காரணமாகவும் இருந்தார்.

2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி, சையது முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே தொடர் என தொடர்ந்து கோப்பைகளை வென்றார். அதைத் தொடர்ந்து அவருக்கு இந்திய ஒரு நாள் அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஆடிய ஐந்து போட்டிகளிலும் 40 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்தார். இரண்டு அரை சதங்களை அடித்திருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணியில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். 5 போட்டிகளில் 243 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட ஆட்டநாயகன் விருது வெல்லவில்லை.
இந்திய அணியில் நான்காம் வரிசையில் இதற்கு முன் பல வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்துள்ளனர். ஆனால் இவர் அந்த இடத்தை ஆணித்தனமாக பிடித்து வைத்துள்ளார். மிகச் சிறப்பான செயல்பாட்டை நான்காம் வரிசையில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த 40 ரன்களை அடிக்காமல் ஒரு போட்டியில் சொதப்பி இருந்தாலும் இந்திய அணி அந்தப் போட்டியில் தோல்வி அடைந்திருக்கும்.
இது பற்றி பேசிய முகமது கைஃப், "நான் அவரது பேட்டிங் ஃபார்மை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அவர் டெஸ்ட் அணியிலும் இடம்பெறவில்லை, டி20 அணியிலும் இடம் பெறவில்லை. இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவதில்லை. ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடிவிட்டு நேரடியாக இந்திய அணிக்காக ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறார். ஆனால் அதே சமயம் அதிரடியாக ஆடுவது, பவுண்டரிகள் அடிப்பது, இயல்பான ஆட்டத்தை ஆடுவது என சிறப்பாக செயல்பட்டார்."
"பல வீரர்கள் இந்திய அணியில் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வருவதும், போவதுமாக இருந்தனர். இந்தியாவில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சரியாக அமையாமல் இருந்தது. ஆனால் இந்த வீரர் அவரது இடத்தை ஆணித்தரமாக பிடித்து சிறப்பான ஆட்டத்தை ஆடி வருகிறார். இந்த தொடரிலேயே இரண்டாவது அதிக ஸ்கோரை (இந்திய அணியில் அதிக ஸ்கோர்) அடித்து இருக்கிறார். ஆனால் அவர் ஒரு போட்டியில் கூட ஆட்டநாயகன் விருது வெல்லவில்லை" எனக் கூறியிருக்கிறார் முகமது கைஃப்.