மாசத்துக்கு 4 லட்சம் போதாது.. ஷமியை போல நாங்களும் பணக்கார வாழ்க்கை வாழணும்.. மனைவி ஹாசின் பேச்சு
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அவரது மனைவி மற்றும் மகளுக்கு மாதம் தோறும் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என கல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், அவரது மனைவி ஹாஸின் ஜஹான் இது குறித்துப் பேட்டி அளித்திருக்கிறார். அதில், 'இந்தப் பணம் எல்லாம் ஒன்றுமே இல்லை. முகமது ஷமி இப்போது வாழும் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்த்தால் எங்களுக்கு அதிக பணம் வழங்க வேண்டும். நாங்களும் அவரைப் போன்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ வேண்டும்' எனக் கூறியிருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு முதல் முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹாஸின் ஜஹான் ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பூதாகரமாக வெடித்தன. ஹாஸின் ஜஹான் ஷமி மீது பல்வேறு புகார்களைக் கூறினார். அவற்றில் எதுவும் இதுவரை நிரூபணமாகவில்லை. இந்த நிலையில்தான், ஹாஸின் உயர்நீதிமன்றத்தில் முகமது ஷமி தங்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனக் கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், முகமது ஷமி அவரது மனைவிக்கு 1.5 லட்ச ரூபாய் மற்றும் அவரது மகளுக்கு 2.5 லட்ச ரூபாய் என மாதம் தோறும் மொத்தம் 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
ஹாஸின் ஜஹானின் அதிருப்தி
இது குறித்துப் பேசிய ஹாஸின் ஜஹான், "நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். மிக நீண்ட போராட்டத்தில் இறுதியாக எனக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. நான் இனி எனது மகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல வாழ்க்கையையும் அளிக்க முடியும். ஷமி இப்போது வாழும் வாழ்க்கையை நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அவருடைய செல்வாக்கு, வருமானம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டால், இந்த பணம் ஒன்றுமே இல்லை."
"நாங்கள் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு இருந்தோம். அப்போது இருந்து முகமது ஷமியின் வருமானமும், பணவீக்கமும் அதிகரித்துவிட்டது. அவர் வாழும் வாழ்க்கையை எனது மகளும் நானும் வாழ்வதற்கு அனைத்து உரிமையும் உள்ளது," என்று கூறியிருக்கிறார்.
தற்போது இந்த வழக்கின் மறு விசாரணை கீழமை நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அப்போது இந்த 4 லட்ச ரூபாய், 6 லட்ச ரூபாயாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என ஹாஸின் ஜஹானின் வழக்கறிஞர் கூறியிருக்கிறார்.
முகமது ஷமியின் தற்போதைய நிலை
முகமது ஷமி தற்போது இந்திய அணியில் வாய்ப்பு இன்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக இந்திய அணிக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடியிருந்தார். அவருக்கு முழங்காலில் காயம் குணமாகிவிட்டாலும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அளவுக்கு அவருக்கு உடல் தகுதி இல்லை என்பதை சுட்டிக்காட்டி இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications