Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: “முதல்ல மீம்ஸ் போடுவதை நிறுத்துங்க..”.. அபிஷேக் சர்மாவை விமர்சித்தவர்களுக்கு ஷமி பதிலடி

கொல்கத்தா: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குரல் கொடுத்துள்ளார். உண்மையான ரசிகர்கள் இக்கட்டான நேரத்திலும் அணிக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்க சுற்றில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இளம் பேட்டர்கள் அபிஷேக் சர்மா, திலக் வர்மா ஆகியோரின் ஆட்டம் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

Mohammed Shami Defends Abhishek Sharma Senior Pacer Slams Trolls Ahead of India vs West Indies

எனினும், அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்தியா மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அடுத்ததாக அரையிறுதிக்குச் செல்லும் அணியை முடிவு செய்யும் மிக முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

ஷமியின் நம்பிக்கை

இந்த நிலையில், புது டெல்லியில் நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சிமாநாட்டில் முகமது ஷமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "ஐசிசி தொடர்களில் உங்களது சிறந்த ஆடும் லெவனைத் தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். கடந்த சில ஆண்டுகளாக டி20 போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாட்டைப் பார்க்கும்போது, அவர்களின் மிகச்சிறந்த ஆட்டம் இன்னும் இந்த உலகக் கோப்பையில் வெளிவரவில்லை என்றே கருதுகிறேன். சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்தச் சிறப்பான ஆட்டம் வெளிவரும் என நம்புகிறேன்" என்று கூறினார்.

ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி

தொடர்ந்து பேசிய அவர் இந்திய வீரர்களை விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். "அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். பேட்டர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், ஒருவரை விமர்சித்துக் கீழே தள்ளுவதும் மிகவும் எளிது. ஆனால், நீங்கள் உண்மையிலேயே இந்த விளையாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், அணியின் நல்ல நேரத்திலும் சரி, சறுக்கலான நேரத்திலும் சரி அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்.

வீரர்களை வைத்து மீம்ஸ் போடுவதைத் தவிர்த்துவிட்டு, அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள். நாம் எதிர்பார்க்கும் சிறப்பான ஆட்டத்தை அவர்கள் நிச்சயம் வழங்குவார்கள். அவர்கள் மீண்டும் தங்களது சிறந்த தரத்திற்குத் திரும்புவார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று ஷமி தெரிவித்தார்.

ஆதரவு தெரிவித்த மிதாலி ராஜ்

முகமது ஷமியின் இந்தக் கருத்துக்கு முன்னாள் இந்திய கேப்டன் மிதாலி ராஜும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சிறப்பாகச் செயல்படும் சிறந்த ஆடும் லெவனுடன் களமிறங்க வேண்டும் என்ற ஷமியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

வெளியில் இருந்து கொண்டு விமர்சிப்பது மிகவும் எளிதான காரியம். ஆனால் முடிவில் நாமெல்லாம் இந்திய அணியின் வெற்றியைத் தான் விரும்புகிறோம். அரையிறுதி வாய்ப்பைத் தீர்மானிக்கும் அடுத்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தைச் சேமித்து வைத்திருக்கலாம்" என்று அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் வீணான விமர்சனங்களைத் தவிர்த்துவிட்டு, வாழ்வா சாவா ஆட்டத்தில் களமிறங்கும் இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவையும் அளிக்க வேண்டும் என்பதே முன்னாள் வீரர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக அமைந்துள்ளது.

Story first published: Sunday, March 1, 2026, 8:29 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+