பயிற்சியில் முகமது ஷமி செய்த செயல்.. மிரண்டு போன ஜஸ்டின் லாங்கர்.. லக்னோ அணியில் தரமான சம்பவம்
லக்னோ: 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாட உள்ள இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. 35 வயதான ஷமி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கும் முனைப்பில் இந்த ஐபிஎல் தொடரை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஷமி, தனது உடல் தகுதியை முழுமையாக மீட்டெடுத்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்ட போதிலும், தேசிய அணியில் அவருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், லக்னோ அணியின் வலைப்பயிற்சியில் பங்கேற்ற ஷமி, தனது சிறப்பான யார்க்கர் பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் முன்னிலையில் அவர் மேற்கொண்ட இந்த பயிற்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

முகமது ஷமியின் இந்த துல்லியமான பந்துவீச்சைப் பார்த்த லக்னோ அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அவரை வெகுவாகப் பாராட்டினார். ஷமியின் பந்துவீச்சைக் கண்டு வியந்துபோன லாங்கர், "உங்களது யார்க்கர் பந்துவீச்சு மூச்சை நிறுத்தும் அளவிற்கு அவ்வளவு அற்புதமாக இருக்கிறது" என்று புகழ்ந்து தள்ளினார். இது தொடர்பான வீடியோவை லக்னோ அணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
வெறும் பந்துவீச்சில் மட்டுமல்லாது, அணியின் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவதிலும் ஷமியின் பங்கு அளப்பரியது என்று லாங்கர் தெரிவித்தார். இது குறித்துப் பேசிய அவர், "அணியினர் மதிய உணவு அருந்தும் போது ஷமி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இளம் வீரர்கள் அனைவரும் அவர் சொல்வதை கண்ணிமைக்காமல் மிகவும் ஆவலுடன் கவனித்து வந்தனர். அவர் ஒரு அபாரமான அனுபவம் கொண்ட வீரர் மற்றும் உண்மையான போர்வீரன். கிரிக்கெட்டில் குரு மற்றும் சிஷ்யன் என்ற உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த அணியில் நடக்கும் விஷயங்களே சிறந்த உதாரணம்" என்று பெருமிதத்துடன் கூறினார்.
2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 1 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஆரம்ப சீசன்களில் பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறிய லக்னோ அணி, இதுவரை இறுதிப்போட்டிக்குச் சென்றதில்லை. அந்த குறையைத் தீர்க்க ஷமியின் சிறப்பான பந்துவீச்சும், அவரது அபாரமான அனுபவமும் லக்னோ அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications