மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்த நிலையில் அனுபவ வீரரான முகமது சமி ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்கப்படவில்லை.
இன்னும் சொல்லப்போனால் 2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. ஆசிய கோப்பை தொடருக்கு சமி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய உடல் தகுதி குறித்து அஜித் அகார்கர் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

அதன் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கூட சமி சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் தமக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து சமி கடுமையாக பேசியிருக்கிறார்.இது குறித்து பேசிய் அவர் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். என்னை அணியில் தேர்வு செய்வது என்பது எனது கையில் எதுவுமே கிடையாது.
எனக்கு உடல் தகுதி பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால்,நான் எப்படி பெங்கால் அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முடியும். நான் இது குறித்து எந்த ஒரு விஷயத்தையும் பேச விரும்பவில்லை. நான் ஏதேனும் பேசினால், அது சர்ச்சையை உண்டாக்கும். நான் நான்கு நாள் நடைபெறும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடினால் என்னால் கண்டிப்பாக 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியும்.
இதே போல் உடல் தகுதி குறித்து அப்டேட்டை அஜித் அகார்கருக்கு கொடுப்பது என்னுடைய வேலை கிடையாது. இது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள நிர்வாகிகள் மருத்துவர்கள் கொடுக்க வேண்டும். அதை அவர்கள் தான் செய்ய வேண்டும் தவிர, அது என்னுடைய பிரச்சனை கிடையாது. நான் எப்போதும் சொல்வதுண்டு சிறந்த வீரர்களை அணிக்காக தேர்வு செய்யுங்கள்.
ஏனென்றால் இது நாடு சம்பந்தப்பட்ட விஷயம். நாடு வெற்றி பெற வேண்டும். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். அதுதான் எனக்கு முக்கியம். நான் தொடர்ந்து களத்தில் போராடுவேன். தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன். நான் களத்தில் நன்றாக விளையாடினால் நிச்சயம் எனக்கு நல்லது நடக்கும். எனினும் அணிக்கு தேர்வாகுவது என்பது எனது கையில் இல்லை. நான் போட்டியில் விளையாடுவதற்காக தான் தயாராக முடியும். என்னை நீங்கள் தேர்வு செய்யவில்லை என்றாலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நான் என்னுடைய பெங்கால் அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று சமி கூறியுள்ளார்.