கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அக்ர்கருக்கும், மூத்த வீரரான முகமது ஷமிக்கும் இடையேயான வார்த்தைப் போர், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. "முகமது ஷமி ஃபிட்டாக இல்லை" என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியதற்கு, "அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்" என்று முகமது ஷமி மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார். தனது வார்த்தைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக, ரஞ்சி டிராபி போட்டியில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது உடற்தகுதியை பந்தால் நிரூபித்துக் காட்டியுள்ளார் ஷமி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஷமி புறக்கணிக்கப்பட்டது, பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதுகுறித்து அஜித் அகர்கர், முகமது ஷமியின் உடற்தகுதி குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியின் முதல் இன்னிங்ஸில், ஒரே ஓவரில் கடைசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்காள அணிக்கு முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்றுத் தந்தார் ஷமி.

போட்டிக்குப் பிறகு, அகர்கரின் கருத்து குறித்துப் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஷமி சற்றும் தாமதிக்காமல், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். "அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் எப்படிப் பந்துவீசினேன் என்பதை நீங்களே பார்த்தீர்கள். எல்லாம் உங்கள் கண் முன்னால் தான் இருக்கிறது" என்று அவர் கூறியது, தேர்வுக்குழுவிற்கு அவர் அனுப்பிய நேரடி செய்தியாகவே பார்க்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, ஷமியின் புறக்கணிப்பு குறித்துப் பேசிய அஜித் அகர்கர், "ஷமி இங்கே இருந்தால், நான் அவருக்குப் பதில் சொல்வேன். அவர் ஃபிட்டாக இருந்தால், ஷமி போன்ற ஒரு பந்துவீச்சாளரை நாங்கள் ஏன் அணியில் தேர்வு செய்ய மறுக்கப் போகிறோம்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
"நான் அவருடன் பலமுறை பேசியுள்ளேன். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களாக, அவர் ஃபிட்டாக இல்லை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அடுத்த சில மாதங்களில் அவர் ஃபிட்டாக இருந்தால், கதை மாறலாம். ஆனால், இங்கிலாந்து தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அவர் ஃபிட்டாக இல்லை" என்று அஜித் அகர்கர் விளக்கமளித்திருந்தார்.
ஷமியின் கோபம், தன்னை அணியில் எடுக்கவில்லை என்பதில் மட்டுமல்ல; அதற்குக் கூறப்படும் காரணத்தில்தான் உள்ளது. முன்னதாகவே இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த ஷமி, "நான்கு நாள் போட்டிகளில் நான் விளையாடிக் கொண்டிருக்கும்போது, என்னால் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாதா? இதற்கு உடற்தகுதி ஒரு காரணமாக இருக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
மேலும், வீரர்களின் உடற்தகுதி குறித்து, தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் (NCA) பேசாமல், வீரர்களையே பொறுப்பாக்குவது ஏன் என்றும் அவர் தேர்வாளர்களைச் சாடியிருந்தார். "அவர்களுக்கு யார் அப்டேட் கொடுக்கிறார்கள்... அது என் பொறுப்பு அல்ல" என்று அவர் கூறியது, தேர்வாளர்களுக்கும், வீரர்களின் மறுவாழ்வைக் கண்காணிக்கும் NCA-க்கும் இடையே ஒரு தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதைக் காட்டியது.
35 வயதான முகமது ஷமி, தொடர் முழங்கால் காயங்களிலிருந்து மீண்டு வந்து, தனது இடத்திற்காகப் போராடி வருகிறார். ஆனால், அணி நிர்வாகம் அவரை மெதுவாக மறந்துவிட்டு, இளம் வீரர்களை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
முகமது ஷமியைப் பொறுத்தவரை, தன்னை அணியிலிருந்து நீக்குவது குறித்து வெளிப்படையாகப் பேசாமல், "உடற்தகுதி" என்ற காரணத்தைக் கூறி, தேர்வாளர்கள் உண்மையைப் பேச மறுக்கிறார்கள் என்ற கோபம் அவரிடம் உள்ளது. இந்த வெளிப்படைத்தன்மை இல்லாததே, அவரது பதில்களில் கசப்பும், அதிருப்தியும் வெளிப்படக் காரணமாக அமைந்துள்ளது.
தேர்வுக்குழுத் தலைவர் தனது பார்வையை முன்வைத்த நிலையில், ஒரு மூத்த வீரராக முகமது ஷமி, தனது விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் அல்ல, செயலால் (பந்தால்) பதிலடி கொடுத்துள்ளார். இந்த வார்த்தைப் போரின் அடுத்த கட்டம், தேர்வுக்குழுவின் அடுத்தடுத்த முடிவுகளில்தான் உள்ளது.