For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“பொய்யா சொல்றீங்க.. ஷமி உங்கள் வாயை அடைப்பார்”.. தேர்வுக் குழுவை வெளுத்த பயிற்சியாளர் பத்ருதீன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விக்கெட் வீழ்த்தி தனது திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், இந்திய டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முகமது ஷமியின் உடற்தகுதியைக் காரணம் காட்டி தேர்வுக்குழுவினர் அவரைப் புறக்கணிப்பதாகக் கூறப்படும் நிலையில், "தேர்வாளர்கள் அவரை வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்; இது அப்பட்டமான இரட்டை வேடம்" என ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளர் முகமது பத்ருதீன் கொந்தளித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காகக் களமிறங்கி மிரட்டி வருகிறார். முதல் மூன்று போட்டிகளில் மட்டும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, உத்தரகாண்ட் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான வெற்றிகளில் முக்கியப் பங்காற்றினார்.

Mohammed Shami s personal Coach Slams Indian team Selectors for test squad Exclusion Despite Ranji Heroics

குறிப்பாக, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில், கடைசி நாளில் பழைய பந்தைக் கொண்டு அவர் நிகழ்த்திய மேஜிக், அவரது அனுபவத்தையும், திறமையையும் மீண்டும் பறைசாற்றியது. குஜராத் அணி 150 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தபோது, தனது அசாத்திய பந்துவீச்சால் அந்த அணியின் மிடில் மற்றும் லோயர் ஆர்டரைச் சரித்து, 185 ரன்களுக்குச் சுருட்டி, பெங்கால் அணிக்கு 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைத் தேடித் தந்தார்.

ஆனாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம்பெறாதது விமர்சனத்தை கிளப்பி உள்ளது. முகமது ஷமியின் தனிப்பட்ட பயிற்சியாளர் பத்ருதீன் இது குறித்து ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார்.

'டி20-யை வைத்து டெஸ்ட் அணி"

இதுகுறித்து பேசிய பத்ருதீன், "என் கருத்து எளிமையானது - தேர்வுக் குழுவினர் முகமது ஷமியை புறக்கணிக்கிறார்கள், அது தெளிவாகத் தெரிகிறது. வேறு எந்தக் காரணமும் எனக்குப் புரியவில்லை. அவர் உடற்தகுதியுடன் இல்லை என்பதெல்லாம் பொய். ஒரு வீரர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 15 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது, அவருக்கு உடற்தகுதி இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், தேர்வுக்குழுவின் தேர்வுக் கொள்கைகளைக் கடுமையாகச் சாடிய அவர், "டெஸ்ட் அணிக்கான தேர்வு, ரஞ்சி டிராபி பிரமாதமான ஆட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆனால், இங்கு டி20 போட்டிகளின் அளவுகோல்களை வைத்து டெஸ்ட் அணி தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறு. யார் ரஞ்சியில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்து, அங்கிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்."

"ஆனால், இங்கு முடிவுகள் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவர்கள் யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற பட்டியலை முன்பே வைத்துள்ளனர். எனவே, திறமையான ஆட்டம் அல்லது உடற்தகுதி பற்றிய பேச்செல்லாம் வெறும் சாக்குப்போக்கு" என்று குற்றம் சாட்டினார் பத்ருதீன்.

முகமது ஷமிக்கு பாதிப்பு

இந்த புறக்கணிப்பால் முகமது ஷமி மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய பத்ருதீன், "நிச்சயமாக, அவர் மன உளைச்சலில் இருக்கிறார். யார் தான் இருக்க மாட்டார்கள்? சிறப்பாகச் செயல்பட்டும் வாய்ப்பு கிடைக்காதபோது அது விரக்தியை ஏற்படுத்தும். நான் அவரிடம், 'உன் வேலை திறமையை வெளிப்படுத்துவது, அதைத் தொடர்ந்து செய். உன் பிரமாதமான ஆட்டம் உனக்காகப் பேசும். அதனால், பதற்றப்படாதே' என்று மட்டும் கூறியுள்ளேன்" என்றார்.

வரலாறு காணாத கம்பேக்!

ஷமி விரைவில் அணிக்குத் திரும்புவார் என முழு நம்பிக்கை தெரிவித்த பத்ருதீன், "அவர் நிச்சயம் திரும்புவார். அப்படித் திரும்பும்போது, அனைவரையும் வாயடைக்க வைக்கும் ஒரு கம்பேக்கை அவர் கொடுப்பார். என்றோ ஒருநாள் அவர்கள் அவரை ஆடவைத்தே ஆக வேண்டும். இப்போது அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், 'நாங்கள் பிரமாதமான ஆட்டங்களின் அடிப்படையில் தான் தேர்வு செய்கிறோம்' என்று சொல்வதை நிறுத்திவிடுங்கள். ஏனென்றால் அது உண்மையல்ல" என்று ஆவேசமாகக் கூறினார்.

ஷமியின் கடின உழைப்பு குறித்துப் பேசிய அவர், "அவர் 25-28 வயதில் எப்படிப் பயிற்சி செய்தாரோ, அதேபோல்தான் இன்றும் செய்கிறார். உண்மையில், வயது கூடும்போது அவரது பயிற்சி நேரம் அதிகரித்துள்ளதே தவிர, குறையவில்லை. தினமும் ஆறு முதல் ஏழு மணி நேரம் மைதானத்தில் செலவிடுகிறார். அவரை யாரும், 'பயிற்சி செய்' என தள்ளத் தேவையில்லை - அனைத்தையும் அவரே செய்கிறார். அப்படிப்பட்ட ஒரு வீரரின் உடற்தகுதியை நீங்கள் சோதிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று புகழாரம் சூட்டினார்.

தற்போதைக்கு ஷமியின் கவனம், மீண்டும் கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாகச் செயல்படுவதில் மட்டுமே உள்ளது என்றும், அவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டால், தேர்வுக்குழுவினரால் அவரை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது என்றும் பத்ருதீன் நம்பிக்கையுடன் கூறினார்.

Story first published: Thursday, November 6, 2025, 13:46 [IST]
Other articles published on Nov 6, 2025
English summary
Mohammed Shami’s personal Coach Slams Indian team Selectors for test squad Exclusion Despite Ranji Heroics
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+