சான்ஸே இல்லை.. அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. வெறுத்துப் போயிட்டாரே ஷமி!
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என நான் நினைக்கவில்லை என்று வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி கூறியுள்ளார்.
கொரோனாவைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருவதால் போட்டிகள் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த நிலையில், இந்த வருடம் போட்டிகள் நடைபெறுமா என்பது சந்தேகம்தான் என்று ஷமி கூறியுள்ளார்.
சமூக வலைதளம் மூலமாக கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஷமியும் ஐபிஎல் போட்டிகள் குறித்த கருத்தைக் கூறியுள்ளார்.

ஷமி கருத்து
இதுதொடர்பாக ஷமி கூறுகையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது என்பது சந்தேகம்தான். அதற்கான நேரம் கடந்து கொண்டுள்ளது. பிசிசிஐ இதுதொடர்பாக திட்டமிட அவகாசம் குறைந்து கொண்டே போகிறது. என்னைப் பொறுத்தவரை இந்த ஆண்டு தொடரை நடத்துவது என்பது கடினம்தான். அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்றார்.

டி20 உலகக் கோப்பை
அடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வேறு வருகிறது. எல்லாவற்றையும் நிறுத்தினால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியும். ஆனால் இப்போது எல்லாப் போட்டிகளையுமே ரத்து செய்ய வேண்டி வருமோ என்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. தற்போதைய சூழலைப் பார்த்தால் எதுவுமே சாத்தியமில்லாதது போலத்தான் தெரிகிறது என்று கூறியுள்ளார் ஷமி.

தள்ளிப் போய் விட்டது
ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஏப்ரலுக்கு அது தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் லாக்டவுன் நீட்டிப்பு செய்யப்பட்டதால் அதுவும் போய் விட்டது. இப்போது போட்டி நடைபெறுமா இல்லையா என்பதே சந்தேகத்திற்கிடமாகி விட்டது. தற்போது காலவரையின்றி போட்டிகளை தள்ளி வைக்கும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது. காரணம் கொரோனாவைரஸ் அடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

2 சான்ஸ் இருக்கு
தற்போது டி20 உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைப் போட்டிகள் தள்ளிப் போடப்படுமா என்று பிசிசிஐ காத்துள்ளது. ஏதாவது ஒன்று தள்ளிப் போடப்பட்டாலும் கூட அந்த கேப்பில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ யோசித்து வருகிறதாம். இருப்பினும் இதுதொடர்பாக இன்னும் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications