இந்திய அணியில் தொடர்ந்து ஷமி புறக்கணிப்பு.. கோல்டன் அட்வைஸ் தந்த ஜாகீர் கான்
மும்பை: இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்தபோதிலும், ஷமி மார்ச் 2025 முதல் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்த 35 வயதான ஷமி, கணுக்கால் மற்றும் குதிங்கால் காயம் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக விளையாடாமல் இருந்தார். கடந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் அவர் மீண்டும் அணிக்குத் திரும்பிய போதிலும், சில வெள்ளை பந்து போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதன் பிறகு, இந்தியாவின் 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பின் அவர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

ஷமியின் சர்வதேச எதிர்காலம் குறித்துப் பேசிய ஜாகீர் கான், "அவர் தனது கைகளில் உள்ளதை மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். தான் எவ்வாறு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். அவர் தொடர்ந்து விளையாடினால், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு அவர் தயாராக இருக்கிறார் என்று அர்த்தம். நான் அப்படித்தான் பார்க்கிறேன், ஆனால் அணி நிர்வாகம் அவரை எவ்வாறு பார்க்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.
கடந்த ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்திய அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக ஷமி மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் இடையே மறைமுகமாக கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இருப்பினும், இந்த உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக 2026 ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
2025-26 ரஞ்சி கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி, 7 போட்டிகளில் 17-க்கும் குறைவான சராசரியில் 37 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், "அவர் எவ்வாறு பங்களிக்க முடியும் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். அணி நிர்வாகம் தன்னை எப்படிப் பார்க்கிறது என்பதை அவரால் கணிக்க முடியாது, ஏனெனில் அது அவரது கட்டுப்பாட்டில் இல்லை. ஷமி தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களைச் சரியாகச் செய்கிறார், அதாவது போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார்" என்று கூறினார்.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் முன்னணி விக்கெட் வீழ்த்தியவராக ஷமி திகழ்கிறார். அவர் உலகக் கோப்பை போட்டிகளில் 13.52 என்ற அசாத்திய சராசரியுடன் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கிடையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

