மும்பை : ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும், டிராகன் போல் நெருப்பை கக்கினர். இதனால் இலங்கை அணி கருகியது.
சமூக வலைத்தளத்தில் மூன்று டிராகன்கள் தலை வீரமாக நிற்பது போல் நிறைய மீம்ஸ்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதை எல்லாம் உண்மையாக்கும் வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் செயல்பட்டனர்.

பேட்டிங்கில் இந்திய அணி வீரர்கள் எட்டு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக கில் 92 ரன்களும், விராட் கோலி 88 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி பந்து வீச தொடங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இலங்கை அணி விக்கெட்டுகளை அல்வா சாப்பிடுவது போல் இந்திய அணி வீரர்கள் எடுத்தனர்.
குறிப்பாக முகமது சிராஜ் தன்னுடைய பழைய பந்துவீச்சை இன்று வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் சிராஜின் பந்துவீச்சை கண்டு இலங்கை வீரர்கள் பயந்தார்களோ அதைப்போல் இன்றைய ஆட்டத்திலும் சிராஜை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் பயந்து நடுங்கினர்.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அசலங்காவும் மேக்யூசும் ஜோடி சேர்ந்து விளையாடினர். அப்போது சிராஜ் வீசிய ஒரு ஓவர் அசலாங்காவிற்கு நரகத்தின் வாயிலையே திறந்து காட்டியது. பாக்ஸிங்கில் எதிரணி வீரரின் குத்துகளை தற்காத்துக் கொள்ள வீரர்கள் எவ்வாறு குனிவார்களோ அதைப்போல் அசலங்கா சிராஜ் வீசிய ஒவ்வொரு பந்தையும் குனிந்து தன்னை காப்பாற்றிக்கொண்டார்.
அப்போது முஹம்மது சிராஜ் டிராகன் நெருப்புக் குழம்பை கக்குவது போல் அவரை ஸ்லெஜிங் செய்து கொண்டே இருந்தார். ஒவ்வொரு பந்து முடியும்போது அசலங்காவை வெறுப்பேற்றும் வகையில் சிராஜ் கிண்டல் செய்தார். இதனை பார்க்கும்போது ஆஸ்திரேலிய வீரர்கள் செய்வதையே மிஞ்சும் அளவுக்கு சிராஜ் சேட்டை செய்கிறாரே என ரசிகர்களும் இதெல்லாம் பாவம் மை சன் என்ற கவுண்டமணி செந்தில் காமெடியை பயன்படுத்தி கருத்து தெரிவித்து வந்தனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஆக்ரோஷமாகவும் பேட்ஸ்மன்களால் தொடவே முடியாத அளவும் இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.