ரத்தம் சொட்ட அழைத்துச்செல்லப்பட்ட இந்திய வீரர்.. அடுத்த 2 போட்டிகளில் இருந்தும் விலகல்? - என்ன ஆனது
அமீரகம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான அடுத்த 2 டி20 போட்டியில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜெய்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 164/6 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 166/5 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

கடின இலக்கு
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தரப்பில் தொடக்க வீரர் மார்டின் கப்தில் 42 பந்துகளில் 70 ரன்களும், சாப்மேன் 50 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை.

வெற்றி
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஓப்பனிங் சிறப்பாக அமைந்தது. கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் 48 ரன்களும், கே.எல்.ராகுல் 15 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன் பின்னர் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். 40 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் விளாசினார். இதனால் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. இதன் மூலம் 1 - 0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

அசத்தல் பவுலிங்
இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக ஃபார்முக்கு திரும்பினர். டி20 உலகக்கோப்பை தொடரில் விமர்சனங்களுக்குள்ளான புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் வீரர் முகமது சிராஜ் 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

காயத்தால் பாதித்த சிராஜ்
இந்நிலையில் அவர் அடுத்து வரும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுவது தற்போது சந்தேகமாகி உள்ளது. முதலாவது டி20 போட்டியின் கடைசி ஓவரை வீசிய அவர், நியூசிலாந்து அணி வீரர் அடித்த பந்தை தடுக்க நினைத்த போது அவரது கையில் பந்து பட்டு பலமாக காயம் ஏற்பட்டது. மைதானத்திலேயே ரத்தம் வடிய வடிய அவர் பரிசோதிக்கப்பட்டார். பின்னர் கையில் டேப் போட்டு மீதமுள்ள பந்துகளை வீசி ஓவரினை வெற்றிகரமாக முடித்தார்.
Recommended Video

விலகலா?
அவருக்கு ரத்தம் வருமளவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தையல் போடும் நிலைமை உண்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மீதமுள்ள அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் விளையாடமாட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்களுக்கும் அவர் தயாராக வேண்டும் என்ற காரணத்தால் அவருக்கு ஓய்வளிக்க பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.


Click it and Unblock the Notifications