சட்டச் சிக்கலில் சிராஜ், திலக் வர்மா, அம்பதி ராயுடு.. நோட்டீஸ் அனுப்பிய தெலங்கானா கிரிக்கெட் சங்கம்
ஹைதராபாத்: தெலங்கானாவில் உள்ளூர் டி20 லீக் போட்டியான 'டிஜி20' தொடரை விளம்பரப்படுத்திய விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ், திலக் வர்மா, அம்பதி ராயுடு மற்றும் தெலுங்கு நடிகர்களுக்கு தெலங்கானா கிரிக்கெட் சங்கம் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் 'டிஜி20' லீக் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முறையான அனுமதி பெறப்படவில்லை என்று தெலங்கானா கிரிக்கெட் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பிசிசிஐ அனுமதியின்றி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் வணிக ரீதியாக இந்தத் தொடரை நடத்துவதாகக் கூறி, தெலங்கானா கிரிக்கெட் சங்கம் சார்பில் ஏற்கனவே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த விதியை மீறிய தொடரை விளம்பரப்படுத்தியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் முகமது சிராஜ், திலக் வர்மா, அம்பதி ராயுடு மற்றும் பிரபல தெலுங்கு நடிகர்களான வெங்கடேஷ், விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு தெலங்கானா கிரிக்கெட் சங்கம் தற்போது சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து தெலங்கானா கிரிக்கெட் சங்கத்தின் பொதுச் செயலாளர் குருவா ரெட்டி கூறுகையில், "ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ-யின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறாமல், போலியான ஆளும் குழுவை அமைத்து பொதுமக்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஏமாற்றி வருகிறது. விதிமுறை 31-ன் படி, விதிகளை மீறும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரத்தை பிசிசிஐ ரத்து செய்ய முடியும். மேலும், இதில் பங்கேற்கும் மற்றும் விளம்பரப்படுத்தும் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படலாம். இந்த விதிமுறை சிராஜ் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கும் பொருந்தும்" என்று எச்சரித்துள்ளார்.
தற்போது முகமது சிராஜுக்கு பணிச்சுமை காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து தொடர்களில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீரரான திலக் வர்மா, இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய 'ஏ' அணியை வழிநடத்தி வருகிறார். மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் புதிய துணை கேப்டனாகவும் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், இந்த சட்டச் சிக்கல் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
