தைரியம் வந்துவிட்டது.. இம்ரான் கானுக்கு ஆதரவாக பேசிய மொயின் கான்.. மியான்தத்தும் குரல் கொடுத்தார்
இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஆதரவாக மற்றொரு முன்னாள் கேப்டனான மொயின் கான் தைரியமாக தனது குரலை எழுப்பியுள்ளார். ஏற்கனவே ஜாவேத் மியாண்டட் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது மொயின் கானும் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இது பற்றி மொயின் கான் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கடந்த 2023 ஆகஸ்ட் முதல் சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு சமீப நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு போதிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை அடுத்து பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் இணைந்து இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளித்து, சிறையில் கண்ணியமாக நடத்த வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

அதுவரை தற்போதைய பாகிஸ்தான் அரசு மீதான அச்சம் காரணமாக பேசாமல் இருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தற்போது தைரியமாக பேசத் துவங்கி உள்ளனர். இது குறித்து சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டுள்ள மொயின் கான், "இம்ரான் கான் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். முன்னாள் பிரதமர் மற்றும் பாகிஸ்தான் குடிமகன் என்ற அடிப்படையில் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சையை பாகிஸ்தான் அரசு வழங்க வேண்டும். அவருடன் விளையாடிய நாம் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு அவர் பல பங்களிப்புகளை செய்துள்ளார். எனவே, அனைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இம்ரான் கானுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 1990 முதல் 2004 வரை பாகிஸ்தானுக்காக விளையாடிய மொயின் கான், இம்ரான் கானின் தலைமையின் கீழ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். மேலும், இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992ல் உலகக் கோப்பையை வென்ற போது, அந்த அணியில் மொயின் கான் 10 போட்டிகளில் விளையாடியிருந்தார். கடந்த 2000 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு ஆசியக் கோப்பையையும் மொயின் கான் வென்று தந்துள்ளார்.
முன்னதாக, இம்ரான் கானுக்கு ஆதரவாக ஜாவேத் மியாண்டட் குரல் கொடுத்தார். இம்ரான் கானின் தற்போதைய நிலை தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், அவர் இத்தகைய கொடுமைகளுக்கு தகுதியானவர் அல்ல என்றும், அவர் எந்த ஊழலும் செய்யவில்லை என்றும் மியாண்டட் கண்ணீர் விட்டு வேதனை தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

