டெல்லி: மகளிர் உலகக் கோப்பை இறுதிக்கு சென்று சாதித்த இந்திய அணி வீராங்கனைகளால், மகளிர் கிரிக்கெட் அணியின் மீதும், பிசிசிஐயின் பார்வை விழுந்துள்ளது. வீராங்கனைகளுக்கும் இனி அதிக பணம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் இடையே உள்ள வருமான பாகுபாட்டை குறைக்கும் வகையிலும், மகளிர் அணியினருக்கு அதிக பணம் கிடைக்கும் வகையிலும், பிசிசிஐயின் பொருளாளர் அனிருத் சவுத்ரி ஒரு புதிய திட்டத்தை அளித்துள்ளார்.

இதற்கு பிசிசிஐயை நிர்வகிக்கும் சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள குழு ஒப்புதல் அளித்ததும், நடைமுறைக்கு வரும்.
முதல் தரப் போட்டிகளில் விளையாடும் வீராங்கனைகளுக்கான, போட்டிக்கான கட்டணம், ரூ.3,500ல் இருந்து, ரூ. 12,500 ஆக உயர்த்தப்படும். அதே நேரத்தில் வீரர்களுக்கான போட்டிக்கான கட்டணம், ரூ.10 ஆயிரத்தில் இருந்து, ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும்.
ஐபிஎல் வந்தபிறகு, அதில் அதிக ஆர்வம் காட்டும் வீரர்கள், ரஞ்சிக் கோப்பை போன்ற போட்டிகளில் பங்கேற்பதில்லை. அதை தவிர்க்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகளுக்கு ஆண்டு ரீட்டெய்னர்ஷிப் தொகையும் உயர்த்தப்படுகிறது. ஏ பிரிவில் உள்ள நான்கு பேருக்கான இந்தத் தொகை, ரூ.15 லட்சத்தில் இருந்து, ரூ.50 லட்சமாக உயரும். பி பிரிவில் உள்ள 6 வீராங்கனைக்கான ரீட்டெய்னர்ஷிப் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து, ரூ.30 லட்சமாக உயரும். மேலும் புதிதாக சி பிரிவு கொண்டு வரப்பட்டு, 10 பேருக்கு, ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு தேர்வாகாத, டெஸ்ட் அணிக்காக விளையாடும் ஏ பிரிவு வீரர்களுக்கான ஆண்டு ரீட்டெய்னர்ஷிப் தொகையாக, ரூ.2 கோடி வழங்கப்படும். பி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும்.
அதேபோல் இந்திய அணிக்காக விளையாடாத, ஐபிஎல் வீரர்களுக்கான அதிகபட்ச தொகையை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அம்பயர்களுக்கான போட்டி கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.