“வைபவ் சூர்யவன்ஷிக்காக அணியின் நம்பிக்கையை குலைக்க முடியாது” இந்திய பவுலிங் கோச் மோர்கல் பேச்சு
மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் 15 வயது இளம் அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் ஆகும் வாய்ப்பு தள்ளிப்போகலாம் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து தொடரில் இந்திய அணி 2-0 என தோற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்து டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷியைப் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தீவிரமடைந்தன. இதுகுறித்து மான்செஸ்டரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மோர்னே மோர்கல் -
"டி20 கிரிக்கெட்டில் தற்போதைய முதன்மை பேட்டரான அபிஷேக் சர்மா, உலகக் கோப்பையின் நாயகனான சஞ்சு சாம்சன் ஆகியோர் எங்களிடம் உள்ளனர். ஏற்கனவே நாட்டுக்காகப் பங்களித்த வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதுதான் ஒரு பயிற்சியாளராக எங்களது கடமையாகும். புதிய வீரர் கதவைத் தட்டுவது மகிழ்ச்சிதான், ஆனால் தற்போதைய வீரர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் அவசர முடிவுகளை நாங்கள் எடுக்க மாட்டோம்" என்று கூறினார்.

மேலும், சஞ்சு சாம்சனின் மோசமான ஃபார்ம் மற்றும் மிடில் ஆர்டரில் தட்டழிந்து வரும் திலக் வர்மா ஆகியோரை நீக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விமர்சனங்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். "வீரர்களை அவர்களது வழக்கமான பேட்டிங் வரிசையைத் தாண்டி வேறு இடங்களில் விளையாட வைக்க நாங்கள் விரும்பவில்லை. கடினமான சூழ்நிலைகளில் உலகக் கோப்பைகளை வென்று தந்த வீரர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, அதன் மூலமாக அணியின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துவதே எங்களது உத்தியாகும்" என்று அவர் கூறினார்.
அதே சமயம், வலைப் பயிற்சியின் போது வைபவ் சூர்யவன்ஷியின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததாக மோர்கல் பாராட்டினார். "15 வயதில் சர்வதேச அணியுடன் இணைவது சற்று பயத்தைத் தரலாம். ஆனால் அவர் அணியுடன் மிக விரைவாகப் பழகிவிட்டார். வலைப் பயிற்சியில் அவரது பேட்டிங் எங்களைக் கவர்ந்தது. அவருக்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், அதை எதிர்கொள்ள அவர் தயாராக இருப்பார்" என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார். இந்த பேட்டியை அடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் வைபவ் ஆடுவது கடினம் என தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
