மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவி ஏற்றதை அடுத்து பல மாற்றங்கள் அணியில் நிகழ்ந்துள்ளது. தற்போது பல ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் ஆன மோர்னே மோர்க்கல் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் ஸ்டார் வீரராக மோர்னே மோர்க்கல் திகழ்ந்த நிலையில் தற்போது அவருடைய பணி எந்த மாதிரி இருக்கும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் மோர்னே மோர்க்கல்லின் அண்ணனும் சிஎஸ்கே முன்னாள் ஆல்ரவுண்டருமான ஆல்பி மார்க்கல் பேசுகையில், தன்னுடைய தம்பியின் கோச்சிங் ஸ்டைல் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணிபுரிவது என்பது உலகத்தில் மிகவும் கடினமான மிகப்பெரிய பணிகளில் ஒன்று.
பயிற்சியாளருக்கு பல பொறுப்புகள் இருக்கின்றது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. இதனால் இந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும்போது தவறுக்கு இடம் இருக்கக் கூடாது. அது மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த வீரர்கள் சூழ தான் மோர்னே மோர்க்கல் இருப்பார்.
இந்திய வீரர்களின் நம்பிக்கை பெறுவதே மோர்னே மோர்க்கலின் முதல் பணியாக இருக்கும். அதனை அவர் எளிதில் பெற்று இந்திய வீரர்களின் முழு திறனையும் வெளி கொண்டுவர மோர்னே முயற்சி செய்வார். மோர்னே மோர்க்கல்லுக்கு பல அனுபவம் இருக்கின்றது. அனைத்து விதமான சூழ்நிலையிலும் மோர்னே இருந்திருக்கிறார்.
தன்னுடைய அனுபவத்தை பயிற்சியாளராக அவர் பயன்படுத்தினாலே நிச்சயம் அவரால் வெற்றி பெற முடியும். அது மட்டுமல்லாமல் வீரர்களிடையே தொடர்பு கொள்ளும் சிறந்த வழியை அவர் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் இந்திய பவுலர்களின் மதிப்பை மோர்னே மோர்க்கல் அதிகரிப்பார் என்று ஆல்பி மோர்க்கல் தெரிவித்துள்ளார்.